/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட தேர்வு மிக எளிது! மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
/
பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட தேர்வு மிக எளிது! மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட தேர்வு மிக எளிது! மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட தேர்வு மிக எளிது! மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
ADDED : மார் 28, 2025 09:53 PM

பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட பொதுத்தேர்வு, மிகவும் எளிமையாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
தமிழகத்தில், பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 50 மையங்களில், தமிழ்ப் பாடத் தேர்வு நடந்தது. தனித்தேர்வர்களுக்கு, பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடந்தது.
அதன்படி, 4,258 மாணவர்கள், 4,316 மாணவியர் என, 8,574 பேர் தேர்வு எழுதினர். 183 மாணவர்கள், 178 மாணவியர் என, 361 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர். அதேபோல, தனித்தேர்வர்களில், 76 மாணவர்கள், 42 மாணவியர் என, 118 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்திருந்த 10 மாணவர்கள், 2 மாணவியர் என, 12 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு குறித்து கந்தசாமிமெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்து:
நித்தின் விஜய்: ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண், 5 மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள் அனைத்திலும் சில வினாக்கள், அகவினாக்களாக இருந்தன. தேர்வுக்கு முன்னரே நன்றாக பயிற்சி எடுத்திருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுத முடிந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும்.
யோகதாரணி: அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. மனப்பாட பாடல், திருக்குறள் உள்ளிட்டவைகளை தொடர்ந்து எழுதி பயிற்சி எடுத்திருந்ததால், தேர்வில் இடம்பெற்றிருந்த வினாக்களுக்கு பிழையில்லாமல் எழுத முடிந்தது. குறுவினா, நெடுவினா பகுதிகள் அனைத்துக்கும் நன்றாக பதில் எழுதி உள்ளேன். பயிற்சி பெற்றிருந்ததால், தேர்வை விரைந்து எழுத முடிந்தது.
ஜீவிதா: ஒரு மதிப்பெண், எட்டு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும், புற வினாக்களாகவே இருந்தது. பயிற்சியின் காரணமாக வினாக்களுக்கு சிந்திந்து விடை எழுத முடிந்தது. நெடுவினா எளிதாக இருந்தது. தேர்வை, 20 நிமிடங்களுக்கு முன்னரே எழுதி முடித்ததால், பிழைகளை சரிபார்க்க முடிந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும்.
* வால்பாறை தாலுகாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டகட்டி, சோலையாறுடேம், வால்பாறை, துாய இருதய மேல்நிலைப்பள்ளி, திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்கோனா உள்ளிட்ட ஏழு மையங்களில் நடந்தது.
ரொட்டிக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:
சித்திரிகா: தமிழ்ப்பாட தேர்வில், வினாத்தாளை வாங்கியவுடன் சந்தோஷமாக இருந்தது. ஆசிரியர் கற்பித்த பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை அச்சமின்றி எழுதினேன். எதிர்பார்த்தது போல் வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டதால், தேர்வை விரைவாகவும், தெளிவாகவும் எழுதியுள்ளேன். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.
சித்தார்த்: தேர்வு மையத்திற்குள் செல்லும் போது மனதில் ஒரு வித படபடப்பு இருந்தது. ஆனால், வினாத்தாளை பெற்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. படித்த பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், மகிழ்ச்சியாக தேர்வை எழுதினேன். தமிழ்த்தேர்வை பொறுத்தவரை அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
* உடுமலையில், 19 மையங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கிறது. நேற்று தமிழ் பாடத்தேர்வு நடந்தது. தமிழ் தேர்வு குறித்து காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:
ரித்திக்: தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. கடந்த அரையாண்டு, முந்தைய பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் வந்திருந்தன. அதிகம் பயிற்சி செய்த வினாக்கள் என்பதால் விடைகளை விரைவில் எழுத முடிந்தது. முதல் தேர்வு சுலபமாக வந்துள்ளதால் அடுத்தடுத்த தேர்வுகளும் அதேபோல் இருக்குமென எதிர்பார்க்கிறோம்.
குருபிரசாத்: தமிழ் தேர்வு வழக்கம் போல் எளிமையாகவே இருந்தது. இலக்கண, இலக்கிய பகுதிகளிலும் எதிர்பார்த்தபடி வினாக்கள் வந்ததால், மகிழ்ச்சியுடன் விடைகளை எழுதினேன். நெடுவினா பகுதி சிறிது கடினமாக இருந்தது. மற்ற பகுதிகள் சுலபம் என்பதால் நெடுவினா பகுதியில் யோசித்து எழுதுவதற்கு நேரம் கிடைத்தது.
- நிருபர் குழு -