/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8வது முறையாக நிரம்பியது சோலையாறு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
/
8வது முறையாக நிரம்பியது சோலையாறு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
8வது முறையாக நிரம்பியது சோலையாறு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
8வது முறையாக நிரம்பியது சோலையாறு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 23, 2024 12:22 AM

வால்பாறை : சோலையாறு அணை இந்தாண்டு எட்டாவது முறையாக நிம்பியதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, ஏழு முறை நிரம்பியது. தொடர்மழை காரணமாக, காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய அணைகளும் நிரம்பின.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வால்பாறையில் மழை தீவிரமாக பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி, பிர்லா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காற்றுடன் கூடிய கனமழை பெய்வதால் பல்வேறு இடங்களில் மண் சரிந்தும், மரம் விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.45 அடியாக உயர்ந்தது.
அணைக்கு வினாடிக்கு, 927 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 500 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இந்த ஆண்டில் சோலையாறு அணை நேற்று, 8வது முறையாக நிரம்பியதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):
வால்பாறை - 55, சோலையாறு - 6, பரம்பிக்குளம் - 3, ஆழியாறு - 18, மேல்நீராறு - 67, கீழ்நீராறு - 32, காடம்பாறை - 30, சர்ச்கார்பதி - 10, மேல்ஆழியாறு - 22, துணக்கடவு - 4, பெருவாரிப்பள்ளம் - 5, நவமலை - 13, பொள்ளாச்சி - 6 என்ற அளவில் மழை பெய்தது.

