/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
களை கட்டியது ஆடிப்பெருக்கு திருவிழா; கிராமங்களில் உற்சாக கொண்டாட்டம்
/
களை கட்டியது ஆடிப்பெருக்கு திருவிழா; கிராமங்களில் உற்சாக கொண்டாட்டம்
களை கட்டியது ஆடிப்பெருக்கு திருவிழா; கிராமங்களில் உற்சாக கொண்டாட்டம்
களை கட்டியது ஆடிப்பெருக்கு திருவிழா; கிராமங்களில் உற்சாக கொண்டாட்டம்
ADDED : ஆக 03, 2025 08:56 PM

- நிருபர் குழு -
உடுமலை பகுதிகளில், ஆடிப்பெருக்கு தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஆடிமாதத்தின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடுமலை அமராவதி ஆற்றின் கரையோரத்திலுள்ள கிராமங்கள் மற்றும் திருமூர்த்திமலைப்பகுதியில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற முதுமொழிக்கு எற்ப, விவசாயிகள் சாகுபடிக்கு தயாராக வைத்துள்ள நெல் உள்ளிட்ட தானியங்களில் விதைகளை, 18, ஒன்பது, ஏழு நாட்களுக்கு முன், முளைப்பாலிகையாக இட்டு, ஆடிப்பெருக்கு தினமாக நேற்று அமராவதி ஆற்றின் வழியோர கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
உற்றார், உறவினர்களுடன் ஆற்றுக்கு வந்து, ஆற்றின் கரையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, அவுள், சர்க்கரை, கல்கண்டு, பொரி மற்றும் உணவு பண்டங்களை படையலிட்டு, நீர் வழிபாடு செய்தனர்.
வேளாண் வளம் சிறக்க, பாசனத்திற்கு ஆதாரமாக உள்ள அமராவதி அன்னைக்கு காணிக்கையாக முளைப்பாலிகையை ஆற்றில் விட்டு வழிபாடு நடத்தினர். தாமரை, தலைவாழை இலையில் விளக்கு வைத்தும், நீர் வழிபாடு மேற்கொண்டனர்.
தென்மேற்கு பருவ மழையால் அணை நிரம்பி, ஆடி 18 தினமான நேற்று அமராவதி ஆற்றில் இரு கரை தொட்டு சென்ற நீரில், விளையாடியும் இளைஞர்கள் மகிழ்ந்தனர்.
அதே போல், புதுமணத்தம்பதிகளுக்கு விருந்தும், புத்தாடையும் கொடுத்தும், புது சரடில் தாலிச்சரடு மாற்றியும், முன்னோர்கள் வழிபாடு என நீர் வளம், நில வளம், உயிரினங்கள் வாழ்வு வளம் வேண்டி வழிபடும் பாரம்பரிய விழாவாக கொண்டாடினர்.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, ஆடிப்பெருக்கு தினமாக நேற்று, சுற்றுப்புற பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
தோணியாற்றின் கரையில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகளை வழிபட்டும், ஆற்றில் விளக்கு, முளைப்பாலிகை விட்டு நீர் வழிபாடு மற்றும் முன்னோர்களுக்காக வழிபாடு நடத்தினர். புதுமணப்பெண்கள் தாலிச்சரடு மாற்றியும் வழிபட்டனர். ஆடிப்பெருக்கு தினமான நேற்று ,ஆடிக்காற்றை வரவேற்கும் வகையில், கிராமங்களில் மரங்களில் துாரி கட்டி, விளையாடி மகிழ்ந்தனர்.
அனைத்து வளங்களும் பெருக கொண்டாடப்படும், ஆடிப்பெருக்கு தினத்தில், கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, உறவினர்கள், நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடினர்.
பொள்ளாச்சி பொள்ளாச்சி பகுதியில், பழமை மாறாமல், நேற்று, இப்பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன்படி, அம்பராம்பாளையம் ஆற்றில் மக்கள் பலரும், தங்கள் குடும்பத்தாரும் வந்து சேர்ந்தனர். வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்யச் சரடு வைத்து வழிபாடு செய்தனர். மேலும், வீட்டில் இருந்து கொண்டு வந்த கலவை சாதத்தை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். முன்னோர்களுக்கு படையல் வைத்தும் பலர் வழிபாடு செய்தனர்.
* பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடிப்பெருக்கையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்படி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், விசாலாட்சி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்ட நிலையில் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மாகாளியம்மன் கோவில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சூலக்கல் மற்றும் தேவனாம்பாளையம் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
குடிமங்கலம் கொங்கல் நகரம், ஸ்ரீ ஹரி வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நலனுக்காக 78 கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வால்பாறை வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 7:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது.
வால்பாறை வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், வால்பாறை ராஜிவ்காந்தி நகர் சந்தனமாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.