/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கேறிய நாடகங்கள் கைதட்டி ரசித்த ரசிகர்கள்
/
அரங்கேறிய நாடகங்கள் கைதட்டி ரசித்த ரசிகர்கள்
ADDED : ஜூன் 23, 2025 04:23 AM

கோவை: கோவையில், மாருதி கான சபா சார்பில், நடந்த நாடக விழாவில் நான்கு நாடகங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. நாடக பிரியர்கள் கைதட்டி ரசித்தனர்.
கோவையில் நாடக கலையை வளர்க்கும் விதமாக மாருதி கான சபா சார்பில் இரண்டு நாட்கள் நாடக விழா நடத்தப்பட்டது. இதில் மூத்த நாடக கலைஞர் காத்தாடி ராமமூர்த்தியின் 'சிக்கல் சிவராமன்', இயக்குனர் ஸ்ரீவத்சன் இயக்கிய 'கபீத்வஜா', கிரிதரன் இயக்கிய 'அந்நியன்', சில்வர் கிரவுன் ஜெகன் இயக்கிய 'ஆராதனை செய் மனமே' ஆகிய நான்கு நாடகங்கள் நடத்தப்பட்டன. அரங்கம் நிறைய நாடக ரசிகர்கள் அமர்ந்து நாடகங்களை கைதட்டி ரசித்தனர்.
கோவையை சேர்ந்த மூத்த நாடக கலைஞர் அனந்த சுப்ரமணியனுக்கு அவரது, 58 ஆண்டுகள் நாடக சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் ஹேமநாதன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
நாடக விழா குறித்து மாருதி கான சபா இயக்குனர் முருகன் கூறுகையில், ''கோவையில் ஒரு காலத்தில் பல மேடை நாடகங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
''இப்போது நாடகங்களை யாரும் நடத்துவதில்லை. மீண்டும் கோவையில் நாடக கலையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாருதி கான சபா சார்பில் இந்த நாடக விழாவை நடத்துகிறோம். இனி மாதம் தோறும் இங்கு நாடகங்கள் நடத்தி, இளைய தலைமுறை நாடக கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறோம்.'' என்றார்.