/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று திட்டச்சாலைகள் உருவாக்க ரூ.20 கோடி கேட்கிறது மாநகராட்சி
/
மூன்று திட்டச்சாலைகள் உருவாக்க ரூ.20 கோடி கேட்கிறது மாநகராட்சி
மூன்று திட்டச்சாலைகள் உருவாக்க ரூ.20 கோடி கேட்கிறது மாநகராட்சி
மூன்று திட்டச்சாலைகள் உருவாக்க ரூ.20 கோடி கேட்கிறது மாநகராட்சி
ADDED : செப் 28, 2024 05:03 AM
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் மூன்று திட்டச்சாலைகள் உருவாக்க, 20 கோடி ரூபாய் கேட்டு, நகர ஊரமைப்புத் துறைக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கருத்துரு அனுப்பியிருக்கிறார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஏழு திட்டச்சாலைகள் உருவாக்க, உத்தேசமாக ரூ.111 கோடி கேட்டு, நகர ஊரமைப்பு துறைக்கு மாநகராட்சியில் இருந்து, ஏற்கனவே கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, மூன்று திட்டச்சாலைகளை உருவாக்கி, அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள, 20 கோடி ரூபாய் ஒதுக்க கோரப்பட்டது.
அதில், நகர அபிவிருத்தி திட்டம்-4ன் கீழ் ஐஸ்வர்யா நகர் முதல் மருதமலை ரோடு வரையுள்ள, 30 அடி அகல திட்டச்சாலை - 623.8 மீட்டர் நீளம்; சரவணம்பட்டி விரிவு அபிவிருத்தி திட்டம்-5ன் கீழ் சரவணம்பட்டி, துடியலுார் பிரதான சாலை முதல் மீனாட்சி நகர் வழியாக அண்ணா நகர் வரை 60 அடி அகல திட்ட சாலை - 1,150 மீட்டர் நீளம்; சின்னவேடம்பட்டி விரிவு அபிவிருத்தி திட்டம் - 5ன் கீழ் துடியலுார், சரவணம்பட்டி பிரதான சாலையை இணைக்கும் தென்வடல் திட்ட சாலை (டான்போஸ்கோ பள்ளி அருகில்) - 600 மீட்டர் நீளத்துக்கு உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டச்சாலைகளை ஏற்படுத்துவது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகரமைப்பு அலுவலர்கள் சத்யா, காந்திமதி உள்ளிட்டோர், திட்டச்சாலை வரைபடங்களை காட்டி, வழித்தடங்களை விளக்கினர்.
மொத்தம், 22 ஆயிரத்து, 639 சதுர மீட்டர் தனியார் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதில், 16 ஆயிரத்து, 653 சதுர மீட்டர் நிலத்தை அதன் உரிமையாளர்கள் தானமாக வழங்குகின்றனர்.
மீதமுள்ள, 5,985 சதுர மீட்டர் பரப்புள்ள தனியார் நிலத்தை கையகப்படுத்த வேண்டியிருக்கிறது.
இச்சாலைகள் உருவாக்கவும், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கவும், தேவையான, 20 கோடி ரூபாயை, கோயமுத்துார் உள்ளூர் திட்டக்குழும நிதியில் இருந்து ஒதுக்கக்கோரி, நகர ஊரமைப்பு துறைக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கருத்துரு அனுப்பியுள்ளார்.