/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர்க்கடன் பெறும் வழிமுறையில் மீண்டும் வந்தது பழைய நடைமுறை
/
பயிர்க்கடன் பெறும் வழிமுறையில் மீண்டும் வந்தது பழைய நடைமுறை
பயிர்க்கடன் பெறும் வழிமுறையில் மீண்டும் வந்தது பழைய நடைமுறை
பயிர்க்கடன் பெறும் வழிமுறையில் மீண்டும் வந்தது பழைய நடைமுறை
ADDED : ஜூலை 29, 2025 05:05 AM
கோவை:
கடந்தாண்டுகளில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்குதலில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளையே, நடப்பாண்டிலும் பின்பற்ற, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன், கூட்டுறவு சங்க பதிவாளரின் சுற்றறிக்கையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன் வழங்கும் நடைமுறையில், சிபில் ஸ்டேட்மென்ட் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு, விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. கடன் நடைமுறையில் இது சிக்கலை ஏற்படுத்தும், பருவத்துக்கு பயிர் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும், விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன், கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில், விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், விவசாயத்தில் ஏற்படும் சிக்கல் குறித்து விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து, சென்னையில் நடந்த கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், சென்னையில் இரு நாட்களுக்கு முன் மண்டல இணைப்பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்குவதில் இடர்பாடுகள் இருப்பதாக, சில மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநர்களால் தெரிவிக்கப்பட்டது.
எனவே, அந்தந்த மாவட்டங்களில் கடந்தாண்டுகளில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்குதலில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளையே நடப்பு ஆண்டிலும் பின்பற்ற, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.