'கமிஷன்' கலாசாரம் ஒழிந்தும் விலை குறையாத கனிமவளம்! நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு
'கமிஷன்' கலாசாரம் ஒழிந்தும் விலை குறையாத கனிமவளம்! நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூன் 14, 2026 12:43 PM
ADDED : ஜூன் 14, 2026 03:28 AM

கிணத்துக்கடவு: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள குவாரிகளில் அத்துமீறலும், கனிமவளம் கடத்தலும் தொடர்வதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு வட்டாரத்தில், 60க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்படுகின்றன. இதில், பெரும்பாலான குவாரிகளில், அதிக வெடி வைத்து பாறைகள் உடைப்பது, அரசு நிர்ணயித்த அளவைவிட கனிமங்கள் வெட்டி எடுப்பது, டிப்பர் லாரிகளில் ஓவர் லோடு ஏற்றி செல்வது உள்ளிட்ட விதிமீறல் நடக்கிறது. இதில், 80 சதவீத கனிமவளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தி.மு.க., ஆட்சியில் ஆளும்கட்சி நபர்கள் நியமிக்கப்பட்டு, ஒரு யூனிட் கனிமவள கற்களுக்கு, 400 முதல் 500 ரூபாய் வரை 'கப்பம்' வசூல் செய்தனர். தற்போது, த.வெ.க., ஆட்சியில் குவாரிகளில் அத்துமீறல், கனிமவளம் கடத்தல் முழுவதும் தடுக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், டிரிப் ஷீட் முறைகேடு, யூனிட்டுக்கு மாமூல் வசூல் மட்டுமே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
ஓவர் லோடு, அதிகமாக வெடி வைத்தல் உள்ளிட்ட அத்துமீறல் தொடர்கிறது. கடந்த, 10 நாட்களில் மட்டும் பொதுமக்களே, 'ஓவர் லோடு' ஏற்றி சென்ற, கேரள பதிவு எண் கொண்ட 4 டிப்பர் லாரிகளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதை தடுக்க, கிணத்துக்கடவு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கடிவாளம் போட வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மாமூல் இல்லை; லஞ்சம் உண்டு
பொதுமக்கள் கூறியதாவது:
குவாரிகளில் இருந்து கனிமவளம் 'ஓவர் லோடு' ஏற்றிய டிப்பர் லாரிகள், கிராம ரோடுகளில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கப்படுகின்றன. இதனால், கிராம ரோடுகள் சேதமடைவதுடன், வழித்தடத்தில் பயணிப்போருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
முந்தைய ஆளும்கட்சியினர் ஒவ்வொரு லாரியையும் நிறுத்தி கனிமவள லோடு அளவுக்கு ஏற்ப, மாமூல் வசூலித்தனர். மேலும், அதிகாரிகளுக்கு லஞ்சம், குவாரிகளில் அதிக விலை, வழித்தடத்தில் மாமூல், போலீசாருக்கு 'கட்டிங்' கொடுத்ததால், மக்களை வந்தடையும் போது கனிம வளத்துக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது, மாமூல் மட்டும் வசூலிப்பதில்லை. மற்றபடி எங்கெங்கு லஞ்ச பணம் செல்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், விற்பனை விலை குறையவில்லை. முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, இதையெல்லாம் கூர்ந்து கவனித்து, அத்துமீறலை தடுத்து, லஞ்சத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, விற்பனை விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
