/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோட்டாட்சியர் வராததால் காத்திருந்த பொதுமக்கள்
/
கோட்டாட்சியர் வராததால் காத்திருந்த பொதுமக்கள்
ADDED : ஜூலை 23, 2025 09:32 PM

மேட்டுப்பாளையம்; காரமடை ஊராட்சி ஒன்றியம் காளம்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது பிளிச்சி கவுண்டனூர் பகுதி. இப்பகுதியில் இருந்து பிளிச்சி கவுண்டன் புதூர் வரை செல்ல பல ஆண்டுகளுக்கு முன் வண்டி தடம் பயன்பாட்டில் இருந்தது.
அதன் பின் வண்டி தடம் தனி நபர்களால் கம்பி வேலி போட்டு அடைக்கப்பட்டது. இது குறித்து வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின் மேட்டுப்பாளையம் தாசில்தார் கடந்த பிப்ரவரி மாதம் வண்டி தடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்கக் கோரி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அந்த வண்டி தடம் பயன்பாட்டில் இல்லை. இதனிடையே நேற்று கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் பார்வையிட வருவதாக இருந்தது. இதனால் ஊர் மக்கள் சுமார் 50 பேர் காலையில் 10 மணி அளவில் இருந்து காத்திருந்தனர். ஆனால் உங்களுடன் முதல்வர் முகாம் காரணமாக வருவாய் கோட்டாட்சியரால் வரமுடியவில்லை.
இதனால் கோபமடைந்த மக்கள் மாலை வரை அதே இடத்தில் காத்திருந்தனர். மேலும் கோட்டாட்சியர் வந்தால் தான் போவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
பின் மாலை 6 மணி அளவில் சம்பவ இடத்திற்கு காரமடைபோலீசார் சென்று சமரசம் பேசினர். இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் வருவார் என தெரிவிக்கப்பட்டது.
பின் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ------