/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காண்டூர் கால்வாய் வழியாக 'டிரக்கிங்' செல்ல வலுக்கிறது எதிர்ப்பு! வனத்துறைக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
/
காண்டூர் கால்வாய் வழியாக 'டிரக்கிங்' செல்ல வலுக்கிறது எதிர்ப்பு! வனத்துறைக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
காண்டூர் கால்வாய் வழியாக 'டிரக்கிங்' செல்ல வலுக்கிறது எதிர்ப்பு! வனத்துறைக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
காண்டூர் கால்வாய் வழியாக 'டிரக்கிங்' செல்ல வலுக்கிறது எதிர்ப்பு! வனத்துறைக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
ADDED : டிச 25, 2024 09:55 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் வழியாக, 'டிரக்கிங்' செல்ல வனத்துறை அனுமதி அளித்ததற்கு, விவசாயிகளிடம் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பி.ஏ.பி., திட்டத்தின் உயிர் நாடியாக விளங்கும் காண்டூர் கால்வாய், கடந்த 61 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. திட்ட தொகுப்பு அணைகளில் சேகரிக்கப்படும் மழைநீரை, சர்க்கார்பதி மின்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணையை அடைகிறது.
மொத்தம், 49.3 கி.மீ., நீளமுள்ள காண்டூர் கால்வாயில், 9.425 கி.மீ.,க்கு 'டனல்'கள் உள்ளன. மலைப்பகுதிகளில் இருந்து ஆங்காங்கே வரும் ஓடைகளின் நீரினை அந்தந்த ஓடைகளிலேயே திருப்பி விடுவதற்கு, 'சூப்பர் பேசேஜ்', 'அண்டர் டனல்' மற்றும் 'ப்ளஸ் எஸ்கேப்' ஆகிய வசதிகள், திட்ட காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வன அனுபவ கழகம் மற்றும் வனத்துறை கூட்டாக இணைந்து, மலையேற்ற திட்டத்தில், 'ஆழியாறு கேனல்' திட்டத்தில், காண்டூர் கால்வாய் பகுதி வழியாக சர்க்கார்பதிக்கு 'டிரக்கிங்' அழைத்து செல்லும் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட, ஆழியாறு - சர்க்கார்பதிக்கு இடையே, எட்டு கி.மீ., துாரத்தை மூன்று மணி நேரத்தில் மலையேற, 1,700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்திட்டத்தால், கால்வாய் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் பரமசிவம் கூறியதாவது:
பி.ஏ.பி., திட்டத்தில், காண்டூர் கால்வாய்க்கு என தனியாக உப கோட்டம் துவங்க வேண்டும்.போலீஸ், வனத்துறை, நீர்வளத்துறைகள் இணைந்து, குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன நீரை கொண்டு செல்லும், காண்டூர் கால்வாய் பகுதியை 'டிரக்கிங்' செல்ல தேர்வு செய்தது தவறு. வனத்துறையின் இந்த திட்டத்துக்கு, கால்வாய் வனப்பகுதிக்குள் செல்ல நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்டார்களா என்பது தெரியவில்லை.
வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பாக சென்றாலும், கால்வாய் ஆழம் தெரியாமல், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணியர், கால்வாயில் குதித்தால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
'டிரக்கிங்' செல்லும் போது எந்த மாதிரியான ஆட்கள் வருவர் என தெரியாது; பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். வனப்பகுதி அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களாக ஒரு முடிவு எடுத்து அழைத்து செல்வது தவறான விஷயம்.
இருமாநில ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், சுற்றுலா அனுமதிப்பது தவறு என்பதை அரசு சிந்திக்க வேணடும். இந்த திட்டத்தை மாற்றியமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

