/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்சியாளர்களுக்கு மறந்தது... சொன்ன சொல்! எகிறுகிறது மின்சார கட்டணம்:ஊழியர் பற்றாக்குறை அதிகம்
/
ஆட்சியாளர்களுக்கு மறந்தது... சொன்ன சொல்! எகிறுகிறது மின்சார கட்டணம்:ஊழியர் பற்றாக்குறை அதிகம்
ஆட்சியாளர்களுக்கு மறந்தது... சொன்ன சொல்! எகிறுகிறது மின்சார கட்டணம்:ஊழியர் பற்றாக்குறை அதிகம்
ஆட்சியாளர்களுக்கு மறந்தது... சொன்ன சொல்! எகிறுகிறது மின்சார கட்டணம்:ஊழியர் பற்றாக்குறை அதிகம்
ADDED : ஜூலை 15, 2024 12:36 AM

கோவை;தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாதாந்திர மின் கணக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது; மூன்றாண்டுகள் ஆகியும், இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது, 'மீட்டர் ரீடிங்' ஆபரேட்டர்கள் கணக்கீடு செய்ய, வீடுகளுக்கு தாமதமாக வருவதால், மின் கட்டணம் எக்குத்தப்பாக அதிகமாகி, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. இதில் முதல், 100 யூனிட் மின்சாரம் இலவசம்.
அதற்கு மேல் பயன்படுத்தினால், 101-200 யூனிட், 201-400 யூனிட், 401-500 யூனிட், 501 யூனிட்டுக்கு மேல் என, 'டேரிப்' முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. யூனிட்டுகள் அதிகரித்தால், 'டேரிப்' முறை மாறி, கட்டணம் எகிறி விடும்.
மின் கட்டணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்த தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலில் மாதாந்திர மின் கணக்கீடு செய்யப்படும் என, வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகளுக்கு மேலாகியும், இந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.
இச்சூழலில், மின் கணக்கீடு செய்வதற்கு இரு மாதத்துக்கு ஒருமுறை, மின் வாரிய ஊழியர்கள் சரியான தேதிக்கு வருவதில்லை. சில நாட்கள் தாமதமாக வருவதால், யூனிட்டுகள் கூடுதலாகி, 'டேரிப்' மாறி விடுகிறது. மின் கட்டணம் அதிகமாகி விடுகிறது.
என்ன பாதிப்பு?
உதாரணத்துக்கு, ஒரு வீட்டில், இரண்டு மாதங்களுக்கு, 480 யூனிட் மின்சாரம் உபயோகம் என வைத்துக் கொண்டால், ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, சில தருணங்களில், ஐந்து நாட்கள் தாமதமாக மின் கணக்கீடு செய்யப்படுகிறது.
ஐந்து நாட்களில், 40 யூனிட்டுகள் பயன்படுத்தி இருந்தால், 520 யூனிட்டுகளாகி விடுகிறது. 100 யூனிட் இலவசத்தை கழித்தால், மீதமுள்ள, 420 யூனிட்டுக்கு கட்டணம் கணக்கிட வேண்டும்.
ஆனால், மின்வாரியம் தரப்பில், முதல் 100 யூனிட் இலவசம் என்கிறார்கள். அதனால், மொத்த பயன்பாடான, 520 யூனிட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்குரிய 'டேரிப்' கட்டணம் கணக்கிடப்படுகிறது.
இதில், 100 யூனிட் இலவசத்தை கழித்து விட்டு, 101 முதல், 520 யூனிட் வரை பிரிக்கப்பட்டுள்ள 'டேரிப்' அடிப்படையில், கட்டணம் செலுத்த வேண்டும் என, விளக்கம் சொல்லப்படுகிறது.
மொத்த பயன்பாடு - 500 யூனிட்டுகளை கடந்து விடுவதால், 'டேரிப்' மாறுகிறது. 101 - 400 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு கட்டணம் ரூ.4.50, 401-500 யூனிட் வரை - ரூ.6.00, 501-520 வரை - ரூ.8 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
101 முதல், 400 யூனிட் வரையிலான, 299 யூனிட்டுக்கு ரூ.4.50 வீதம் ரூ.1,345.50. 401 முதல், 500 யூனிட் வரையிலான, 99 யூனிட்டுக்கு ரூ.6 வீதம் ரூ.594. 501 யூனிட் முதல், 520 யூனிட் வரையிலான, 19 யூனிட்டுக்கு ரூ.8 வீதம், 152 ரூபாய். மொத்தமாக சேர்த்தால், (ரூ.1,345.50, ரூ.594, ரூ.152) ரூ.2,091.50 மின் கட்டணமாக செலுத்த வேண்டிய கட்டாயம், பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.
ஊழியர் பற்றாக்குறை
இதுதொடர்பாக, மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
ஊழியர் பற்றாக்குறை காரணமாகவே, சரியான நேரத்துக்கு மின் கணக்கீடு செய்ய முடிவதில்லை. என்றாலும் கூட, 'கடந்த முறை கணக்கீடு செய்த தேதிக்குச் செல்ல முடியாவிட்டால், ஐந்து நாட்கள் முன்னதாகவோ அல்லது ஐந்து நாட்கள் பின்னரோ, மீட்டர் 'ரீடிங்' எடுக்கலாம்' என, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
ஆறாவது நாள் சென்று கணக்கீடு செய்தால், மீட்டர் ரீடிங் இயந்திரத்தில், மின் உபயோகத்தை பதிவேற்றம் செய்ய முடியாது.
மாநில அளவில், அனைத்து மாவட்டங்களிலும் மின் மீட்டர் 'ரீடிங்' ஆபரேட்டர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். 2014க்குப் பின், மீட்டர் ரீடிங் ஆபரேட்டர்கள் பணியிடம் பூர்த்தி செய்யாததால், காலி பணியிடங்கள் அதிகமாக இருக்கின்றன.
பற்றாக்குறையாக உள்ள இடங்களில், கணக்கீட்டு ஆய்வாளர்கள், வருவாய் மேற்பார்வையாளர் அந்தஸ்திலான அதிகாரிகளும், 'மீட்டர் ரீடிங்' எடுக்கும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண, காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.