/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீசன் துவங்கியாச்சு; காப்பீடு என்னாச்சு? விவசாயிகள் கேள்வி
/
சீசன் துவங்கியாச்சு; காப்பீடு என்னாச்சு? விவசாயிகள் கேள்வி
சீசன் துவங்கியாச்சு; காப்பீடு என்னாச்சு? விவசாயிகள் கேள்வி
சீசன் துவங்கியாச்சு; காப்பீடு என்னாச்சு? விவசாயிகள் கேள்வி
ADDED : நவ 11, 2024 06:51 AM
உடுமலை : பருவமழை சீசனில், பயிர் காப்பீடு குறித்து, தோட்டக்கலைத்துறையினர் எவ்வித வழிகாட்டுதலும் வழங்கவில்லை; பெரும்பாலானவர்களுக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை என, உடுமலை பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பருவமழை பொழிவு, பி.ஏ.பி., பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால், ஒவ்வொரு சீசனிலும், கூடுதலாக காய்கறி உள்ளிட்ட தோட்டக்கலை சாகுபடியில், ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
வாழை, பீட்ரூட், தழை கொத்தமல்லி, பச்சை மிளகாய், சின்னவெங்காயம், தக்காளி உள்ளிட்ட சாகுபடிகள் அதிகளவு உள்ளது. இதில், சின்னவெங்காய சாகுபடிக்கு பிற சாகுபடிகளை விட அதிக செலவாகிறது.
தற்போது, வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. அதிக மழைப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால், சாகுபடி பாதிக்கும் போது, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதற்கு நிவாரணம் கிடைக்கும் வகையில், மத்திய, மாநில அரசு சார்பில், பயிர் காப்பீட்டு திட்டம் அமலில் உள்ளது.
ஒவ்வொரு சீசனிலும், வருவாய் உள்வட்ட அளவில், காப்பீடு செய்ய வேண்டிய பயிர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும். நடவு செய்யும் போது, உரிய பிரிமீயம் செலுத்தினால், சாகுபடியில் ஏற்படும் இழப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கும் முன், பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், பிற விவசாயிகள் இ-சேவை மையங்கள் வாயிலாகவும் பயிர் காப்பீடு செய்வது வழக்கம்.
இந்தாண்டு, சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், உள்வட்ட அளவிலான தேர்வு செய்யப்பட்ட பயிர்கள் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாமல் உள்ளனர்.
சீசன்தோறும், இத்தகைய காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறுவார்கள். மேலும், அதிக மழையால், பாதிப்பு ஏற்படும் போது, நிவாரணம் பெற்றுத்தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.