/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலைக்கல்லுாரியில் 149 இடங்கள் காலியாக உள்ளன
/
அரசு கலைக்கல்லுாரியில் 149 இடங்கள் காலியாக உள்ளன
ADDED : ஜூன் 17, 2025 09:26 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள பட்டப்படிப்பு வகுப்புகளில், 149 இடங்கள் காலியாக உள்ளன. எனவே கல்லூரியில் சேர, மாணவர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் மலை அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. கல்லூரியில் ஆங்கில இலக்கியம், பொருளியல், பி.காம், பி.காம்.சி.ஏ., கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை ஆகிய 9 இளநிலை பட்டப்படிப்பு வகுப்புகள் உள்ளன. இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, இம்மாதம் முதல் வாரத்தில் துவங்கியது.
கல்லூரியில் உள்ள, 9 இளநிலை பட்டப்படிப்பு வகுப்புகளில், மொத்தம், 480 இடங்கள் உள்ளன. கடந்த, 4ம் தேதியில் இருந்து, 16ம் தேதி வரை நடந்த கலந்தாய்வில், 331 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். இன்னும் ஒவ்வொரு பாட வகுப்புகளிலும், காலி இடங்கள் உள்ளன.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு) மாரிமுத்து கூறியதாவது: கடந்த, 16 நாட்களாக கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. ஆனால் இன்னும் பல பாடப்பிரிவுகளில், 149 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் பி.காம்., பிரிவில் 11 இடங்கள், பி.காம்., சி.ஏ.,வில்,7, பி.ஏ. ஆங்கிலத்தில், 27, பொருளியலில், 12, சுற்றுலா பயண மேலாண்மையில், 28 இடங்கள், பி.எஸ்.சி., கணிதத்தில், 47, இயற்பியலில், 7, வேதியியலில், 10 இடங்கள் காலியாக உள்ளன.
தற்போது மாணவர் சேர்க்கை உடனடியாக நடைபெறுகிறது. எனவே தகுதி உள்ள மாணவ, மாணவியர் கல்லூரியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.