/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் இருக்கு; பஸ் இல்லை! 2வது சந்திப்பு போத்தனுாருக்கு... வலுக்குது பயணியர் கோரிக்கை
/
ரயில் இருக்கு; பஸ் இல்லை! 2வது சந்திப்பு போத்தனுாருக்கு... வலுக்குது பயணியர் கோரிக்கை
ரயில் இருக்கு; பஸ் இல்லை! 2வது சந்திப்பு போத்தனுாருக்கு... வலுக்குது பயணியர் கோரிக்கை
ரயில் இருக்கு; பஸ் இல்லை! 2வது சந்திப்பு போத்தனுாருக்கு... வலுக்குது பயணியர் கோரிக்கை
ADDED : நவ 11, 2024 05:10 AM
கோவை, : இரண்டாவது சந்திப்பாக போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மாற உள்ள நிலையில், பொதுமக்கள் வந்து செல்ல அனைத்து பகுதிகளில் இருந்தும், பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் வந்து செல்லும் பல ஆயிரம் பயணியரால், எப்போதும் நெருக்கடி இருந்து கொண்டுள்ளது. பல ஆயிரம் பயணியர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்வதால், நகருக்குள் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது.
இதற்கு தீர்வாக, நகரின் முக்கிய ரயில்வே ஸ்டேஷனான போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனை இரண்டாவது சந்திப்பாக மாற்ற வேண்டும் கோரிக்கை விடப்பட்டது.இதையேற்றுக் கொண்ட ரயில்வே நிர்வாகம், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில், போத்தனுார் மற்றும் வட கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இரு ரயில்வே ஸ்டேஷன்களிலும், 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
இரண்டாவது சந்திப்பு
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனை இரண்டாவது சந்திப்பாக மாற்ற துரித கதியில் பணிகள் நடந்து வருகின்றன. கோவையில் இரண்டாவது முனையமாக போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மாற உள்ளதால், அப்பகுதி வளர்ச்சி அடைவதுடன், பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படும்.
இதைக்கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு ரயில்களை போத்தனுார் வழியாகவும், போத்தனுாரில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏராளமான பயணியர் இப்பகுதிக்கு வந்து செல்ல துவங்கியுள்ளனர்.
பஸ் வசதி இல்லை
ஆனால், போத்தனுாரில் இருந்து நகருக்குள் செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதைக்கருத்தில் கொண்டு, சிங்காநல்லுார், உக்கடம், ராமநாதபுரம், காந்திபுரம், பேரூர், வெள்ளலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போத்தனுாருக்கு பஸ் வசதியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில்,'ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளன.
'பஸ் விடுவது குறித்தும், அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. அதற்கு ஏற்றார்போல், பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
பயணியர் சிரமம்
ரயில்வே நிர்வாகம் போத்தனுார் வழியாக பல்வேறு ரயில்களை இயக்கத் துவங்கி விட்டது. இதனால், பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், இங்கிருந்து நகருக்குள் செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ்களை இயக்கும்போது பயணிகளின் சிரமம் முழுவதும் குறையும். போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுப்ரமணியன்,பொதுச்செயலாளர்,
ரயில் பயனாளர்கள் சங்கம், போத்தனுார்.