/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் கிழக்குப்புறவழிச்சாலை இப்போதைக்கு இல்லை! ... நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கைவிரிப்பு
/
கோவையில் கிழக்குப்புறவழிச்சாலை இப்போதைக்கு இல்லை! ... நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கைவிரிப்பு
கோவையில் கிழக்குப்புறவழிச்சாலை இப்போதைக்கு இல்லை! ... நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கைவிரிப்பு
கோவையில் கிழக்குப்புறவழிச்சாலை இப்போதைக்கு இல்லை! ... நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கைவிரிப்பு
ADDED : ஏப் 05, 2025 11:22 PM

கோவை: 'கோவையில் மேற்குப்புறவழிச்சாலை திட்ட பணிகள் முடிந்த பிறகே, கிழக்குப்புறவழிச்சாலை பணி துவக்கப்படும்' என, மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு திட்டவட்டமாக கூறியுள்ளார். அதனால், கிழக்கு புறவழிச்சாலை திட்டம் இப்போதைக்கு அமைய வாய்ப்பில்லை என்கிற சூழல் உருவாகியுள்ளது.
கோவை நகரப்பகுதி வழி யாகவே, என்.எச்., 544 சேலம் - கொச்சின், என்.எச்., 81 திருச்சி ரோடு, என்.எச்., 181 மேட்டுப்பாளையம் ரோடு, என்.எச்., 82 பொள்ளாச்சி ரோடு, என்.எச்., 948 சத்தியமங்கலம் ரோடு ஆகிய ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன.
நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை மட்டுமே புறவழிச்சாலை இருக்கிறது. நகருக்கு வெளியே சுற்றுச்சாலை இல்லாததால், கனரக வாகனங்களும் நகர்ப்பகுதிக்குள் வருவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண, பாலக்காடு ரோட்டில் சுகுணாபுரத்தில் துவங்கி, நரசிம்மநாயக்கன் பாளையத்தில் முடியும் வகையில், 32.43 கி.மீ., துாரத்துக்கு மேற்குப்புறவழிச்சாலை திட்டம்; மதுக்கரையில் துவங்கி, மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலுார், காரணம்பேட்டை, கணியூர், குன்னத்துார் வழியாக, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில், 81 கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை உருவாக்கும் திட்டம் திட்டமிடப்பட்டது.
இதில், மேற்குப்புறவழிச்சாலை மூன்று கட்டடங்களாக செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டு, முதல் கட்ட பணி முடியும் தருவாயில் இருக்கிறது. இரண்டாம் கட்ட பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது; மூன்றாம் கட்ட பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
கிடப்பில் கிழக்கு
கிழக்கு புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இச்சாலை உருவானால், நகருக்கு வெளியே சுற்றுச்சாலை கிடைக்கும். கேரளம், கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சேலம், மதுரை மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள், கோவை நகர்ப்பகுதிக்குள் நுழையாமல், புறநகரிலேயே கடந்து செல்லலாம்.
இதுதொடர்பாக, கோவை வந்த மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவிடம் கேள்வி எழுப்பியபோது, ''மேற்குப்புறவழிச்சாலை பணியை முடித்த பிறகே, கிழக்குப்புறவழிச்சாலை பணியை எடுக்க முடியும்,'' என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். மேற்குப்புறவழிச்சாலை இரண்டாம் கட்ட பணிக்கு வரும் மே மாதம் டெண்டர் கோரப்பட இருக்கிறது. அதன் பின், நில அளவீடு செய்து, சாலையை உருவாக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படும்.
மூன்றாம் கட்டத்துக்கு தேவையான, நிலம் கையகப்படுத்தும் பணி இப்போதுதான் துவங்கியுள்ளது. அப்பகுதியில் சாலை அமைக்க நிதி ஒதுக்கி, டெண்டர் கோரி, அப்பணியை செய்ய பல ஆண்டுகளாகும்.
கிழக்குப்புறவழிச்சாலை திட்டம், 2016ல் முன்மொழியப்பட்டு, 2018ல் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது; ஏழு ஆண்டுகளாகி விட்டன. மேற்குப்புறவழிச்சாலை பணியை முடித்து விட்டே கிழக்குப்புறவழிச்சாலை திட்டத்தை துவக்க நினைத்தால், காலவிரயம் ஏற்படும்.
அதை தவிர்க்க, இப்போதே திட்டமிட்டு, நிலம் கையகப்படுத்துவதற்கான வேலையை செய்தால், மேற்குப்புறவழிச்சாலை முடிந்ததும், கிழக்குப்புற வழிச்சாலை பணியை துவக்கலாம் என, தொழில்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

