/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் விமானத்தை கடத்த போவதாக மிரட்டல்
/
கோவையில் விமானத்தை கடத்த போவதாக மிரட்டல்
ADDED : அக் 15, 2024 07:12 AM

கோவை: கோவையில் இருந்து சென்னைக்கு, இண்டிகோ விமானம், 169 பயணியருடன் நேற்று முன்தினம் மாலை புறப்பட தயாரானது. அப்போது விமானத்திற்குள், துண்டு சீட்டு ஒன்று கிடந்தது. அதை விமான ஊழியர் எடுத்து பார்த்த போது, அதில் விமானத்தை கடத்த போவதாக எழுதப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடனடியாக மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணியர் அனைவரும், பாதுகாப்பு கருதி உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர்.
இந்த விமானத்தில் தமிழக அமைச்சர் சக்கரபாணி, உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆகியோரும் இருந்தனர். அவர்களும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின், விமான நிலையத்தில் இருந்த அனைத்து பயணியரும், மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
விமானத்தையும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் அது வதந்தி என்பது தெரியவந்ததை தொடர்ந்து, விமானம் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றது. போலீசார் அந்த துண்டு சீட்டை எழுதி போட்டது யார் என, விசாரிக்கின்றனர்.

