/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளியில் பூச்சி, நோய் கட்டுப்படுத்த ஆலோசனை
/
தக்காளியில் பூச்சி, நோய் கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : ஜூலை 25, 2025 08:46 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில், 450 ஹெக்டேர் பரப்பில் ஆண்டு தோறும் தக்காளி நடவு செய்யப்படுகிறது. தற்போது பெரும்பாலான விவசாயிகள் தக்காளி பயிரை நடவு செய்துள்ளார்கள்.
இதில், பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தக்காளி பயிரில், ஊசி காய் துளைப்பான் புரோட்டினியா குழு மற்றும் பச்சைக் காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, அசாடிராக்டின், பேசிலஸ் துர்ஜியான்சிஸ், எமாமெக்டின் பேன்ஜோட், ஸ்பைனோசேட் உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்தலாம்.
இலை துளைப்பான் பூச்சியை கட்டுப்படுத்த தையோமீத்தாக்சம், இலை பேனை கட்டுப்படுத்த ஸ்பெனிடோரம், சிவப்பு சிலந்தியை கட்டுப்படுத்த அசாடிராக்டின் மற்றும் பிரோபர்கிட் போன்ற மருந்துகளை தெளிக்க வேண்டும்.
இதே போன்று, தக்காளி பயிர்களில் ஏற்படும் நோய்களான இலை கருகலை கட்டுப்படுத்த, மேன்கோசெப், பைரக்லோஸ்ட்ரோபின், அஸாக்ஸிஸ்ட்ரோபின், டைபன்கெனாசோல், ட்ரைப்ளாக்ஸிஸ்ட்ரோபின் உள்ளிட்ட மருந்துகளை தெளிக்கலாம்.
சேப்டோரியா இலைப்புள்ளி தாக்குதலுக்கு காப்பர் ஆக்ஸிகுளோரைடு, புலாக்ஸி தைராக்ஸைடு தெளிக்கலாம். பாக்டீரியா இலை புள்ளிக்கு ஸ்டெரப்ட்டோ சைக்ளின் தெளிக்க வேண்டும். இந்த மருந்துகளை தோட்டக்கலை துறை அல்லது வேளாண் பல்கலை அதிகாரிகள் ஆலோசனை படி உரிய அளவில் உபயோகிக்க வேண்டும்.
இவ்வாறு, தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.