/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று மஹாளய அமாவாசை; நந்தவனத்தில் சிறப்பு ஏற்பாடு
/
இன்று மஹாளய அமாவாசை; நந்தவனத்தில் சிறப்பு ஏற்பாடு
ADDED : அக் 01, 2024 11:52 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சி நந்தவனத்தில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு, பொது மக்கள் திதி கொடுக்க, தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் நகராட்சி கோவிந்தம்பிள்ளை மயானத்தில், பவானி ஆற்றின் கரையோரம், அனைத்து ஹிந்து சமுதாய சங்க நந்தவனம் உள்ளது. நந்தவனத்தில் மயானமும், நந்தவனத்தின் மேலே சத்தியமூர்த்தி நகர் மலைமீது, சிவன் கோவில் உள்ளது.
நந்தவனத்தின் கீழே பவானி ஆறும் ஓடுகிறது. அதனால் காசிக்கு இணையாக, இந்த நந்தவனம் அமைந்துள்ளது என கூறுகின்றனர். ஏராளமான மக்கள் தினமும், கர்ம காரியங்கள் செய்யவும், முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் வருகின்றனர்.
இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு, திதி கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள், மேட்டுப்பாளையம் நந்தவனத்திற்கு வர உள்ளனர். அதனால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, நந்தவன நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
அனைத்து ஹிந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுகுமார், பொருளாளர் அருணாச்சல குமார் கூறியதாவது:
நந்தவனத்தில் வழக்கமாக, 13 புரோகிதர்கள் உள்ளனர். இவர்கள் நந்தவனத்துக்கு வரும் மக்களுக்கு திதி மற்றும் கர்ம காரியங்களை செய்து வருகின்றனர். திதி செய்ய கட்டணம் ஏதும் நிர்ணயம் செய்யவில்லை.
அதே நேரத்தில், புரோகிதம் செய்வோருக்கு மக்கள் விருப்பம் போல் தொகை வழங்கலாம்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு, நந்தவனத்தில் கூடுதலாக, 27 புரோகிதர்கள் நியமித்து மொத்தம், 40 புரோகிதர்கள் அமர்ந்து புரோகிதம் செய்ய, தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மக்கள் வசதிக்காக அதிகாலை, 4:00 மணிக்கு நந்தவனம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரிசையாக செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் தனியாக திதி கொடுக்க வசதியும், முதலுதவி மையம், ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நீண்ட நேரம் காத்திருக்கும் மக்களுக்கு டீ, பிஸ்கட், குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும், அஸ்தி கரைக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்களை வரிசைப்படுத்தி, வழிகாட்டும் பணியில், சங்க உறுப்பினர் 150 பேர், தன்னார்வப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

