/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர் ஊதிய பிரச்னை விஸ்வரூபம்; அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆயத்தம்
/
துாய்மை பணியாளர் ஊதிய பிரச்னை விஸ்வரூபம்; அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆயத்தம்
துாய்மை பணியாளர் ஊதிய பிரச்னை விஸ்வரூபம்; அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆயத்தம்
துாய்மை பணியாளர் ஊதிய பிரச்னை விஸ்வரூபம்; அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆயத்தம்
ADDED : மே 01, 2025 05:34 AM

கோவை, : கோவை மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களிடம் ஊதிய உயர்வு, பணி நிரந்தர பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆயத்தமாகி வருகின்றன.
கோவை மாநகராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட நிரந்தரம், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், நிரந்தர துாய்மை பணியாளர்கள் நியமிக்க தடை விதித்து, இரு ஆண்டுகளுக்கு முன்பு அரசாணை(எண்: 152) வெளியிடப்பட்டது.
குப்பை அள்ளும் பணியும் தனியாரிடம் வழங்கப்பட்டது, ஒப்பந்த பணியாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, மாவட்ட நிர்வாகம் உயர்த்தி அறிவித்த ரூ.721 தினக்கூலியை, மாநகராட்சி வழங்காததால், 2022ல் இவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து, டிச., மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில், 2023 ஜன., 1 முதல் தினக்கூலியாக ரூ.648 வழங்க முடிவு செய்யப்பட்டு, இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் போக தினக்கூலியாக ரூ.486 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்காலிக துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி பிரதான அலுவலகத்தை நேற்று காலை, 7:00 மணிக்கு திடீரென முற்றுகையிட்டனர்.
ஐந்து தொழிற் சங்கங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர் தமிழக அரசையும், கோவை மாநகராட்சியையும் கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். பின்னர், 10:35 முதல், 11:40 மணி வரை மாநகராட்சி துணை கமிஷனர்கள் குமரேசன், சுல்தானா ஆகியோருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
துாய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறுகையில், ''எங்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவித்த ரூ.721 தினக்கூலி வழங்க வேண்டும். பணி நிரந்தரமே எங்களது பிரதான கோரிக்கை.
கோரிக்கைகளை வலியுறுத்தி, விரைவில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கவுள்ளோம்,'' என்றார்.
தி.மு.க., அரசு மீது, கொந்தளிப்பில் இருக்கும் துாய்மை பணியாளர்கள், வரும் சட்டசபை தேர்தலில் தக்க பதிலடி தருவார்கள் என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.

