/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் பாதுகாப்பு முதல் பெற்றோர் உறவு வரை பயிற்சி
/
மாணவர் பாதுகாப்பு முதல் பெற்றோர் உறவு வரை பயிற்சி
ADDED : ஜூலை 13, 2025 05:42 AM
கோவை : கோவை மாவட்டத்தில் இயங்கும், அனைத்து வகை தனியார் பள்ளி முதல்வர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் கோவை நகரம், எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் இயங்கும் சி.பி.எஸ்.இ., மெட்ரிக், சுயநிதி, நர்சரி, பிரைமரி மற்றும் விளையாட்டு பள்ளிகளின் முதல்வர்கள், 782 பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். ஜூலை 8ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி, நேற்று முன் தினம் நிறைவடைந்தது.
போக்சோ சட்டம், போதைப்பொருள் ஒழிப்பு, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் காலை மற்றும் பிற்பகல் அமர்வுகளாக பயிற்சிகள் நடைபெற்றன. போக்சோ ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலர் (தனியார்) புனிதா அந்தோணியம்மாள் கூறியதாவது:
இந்த பயிற்சியில் கூடுதலாக, பள்ளி வாகனங்களுக்கான தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் பதிவு, உரிமம், போக்குவரத்து விதிகள், விபத்து இழப்பீடு ஆகியவையும் விளக்கப்பட்டன. பள்ளிகளில் செயல்படும் சிற்றுண்டி நிலையங்கள் உரிமம் பெறுவது, உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம், துரித உணவுகளை தவிர்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், பெற்றோர்களிடம் குழந்தைகளின் கல்வி மற்றும் செயல்திறனை பகிர்ந்து கொள்ளும் முறைகள், பெற்றோர் உறவுகள் மற்றும் நிர்வாகக் கையாள்வுகள் குறித்தும் பயிற்சியில் வழிகாட்டல் வழங்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.