கோவையில் நாட்டு கருவேல மரங்கள் வெட்டிச்சாய்ப்பு! சூழல் ஆர்வலர் எதிர்ப்பு; 2 லாரிகள் பறிமுதல்
கோவையில் நாட்டு கருவேல மரங்கள் வெட்டிச்சாய்ப்பு! சூழல் ஆர்வலர் எதிர்ப்பு; 2 லாரிகள் பறிமுதல்
UPDATED : அக் 23, 2026 12:41 AM
ADDED : அக் 23, 2026 12:36 AM

கோவை: கோவையில் சீமை கருவேல மரங்கள் வெட்டுவதற்கு தரப்பட்ட அனுமதிக்கு மாறாக, ஏலதாரர்கள் நாட்டு கருவேல மரங்களை வெட்டிச் சாய்த்தனர். இதற்கு சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மரத்துண்டுகளுடன் இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், குளங்கள், வாய்க்கால், சாலைப்பகுதிகள், அரசுக்கு சொந்தமான இடங்கள், தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற மாநகராட்சி ஏலம் விட்டது.
ரூ.26.14 லட்சத்துக்கு தெற்கு உக்கடத்தை சேர்ந்த முபசீரா என்பவருக்கு ஏலம் தரப்பட்டது. உதவி நிர்வாக பொறியாளர், உதவி நகரமைப்பு அலுவலர், உதவி வருவாய் அலுவலர் அடங்கிய குழு மேற்பார்வையில் வெட்ட வேண்டும். மீண்டும் வளராத அளவுக்கு வேரோடு பெயர்த்தெடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அனுமதி தரப்பட்டது.
ஏலம் எடுத்தவர்கள், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் சீமை கருவேல மரங்களை வெட்டாமல், குனியமுத்துாரில் நீர்வளத்துறைக்கு சொந்தமான செங்குளத்தில், சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தில் வனத்துறையால் நட்ட நாட்டு கருவேல மரங்களை வெட்டினர். 50க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு, துண்டு துண்டுகளாக்கி, இரண்டு லாரிகளில் ஏற்றினர்.
மரத்துண்டுகள் ஒரு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.
ஒரு லாரி குளத்தில் நின்றிருந்தது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கண்டறிந்து, மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தனர்.
விசாரணையில், மரம் வெட்டுவோருக்கு மாநகராட்சி அதிகாரிகளே சுண்டக்காமுத்துாரில் உள்ள சமுதாய கூடத்தை ஒதுக்கிக் கொடுத்திருப்பது தெரியவந்தது. அங்கு 20 பேர் தங்கியிருப்பதும், மரம் வெட்டுவதற்கு அவர்கேள உடந்தையாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதன் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுைகயில், ‘‘மரங்கள் பறவைகளின் வாழ்விடமாகவும், இனப்பெருக்கம் செய்வதற்கும் ஆதாரமாக உள்ளன. நீர்வளத்துறைக்கு சொந்தமான குளத்தில் மரங்களை வெட்ட மாநகராட்சி எவ்விதத்தில் அனுமதி வழங்கியது. சூழலியல் முக்கியத்துவம், பறவைகளின் எண்ணிக்கை, அவற்றின் வாழ்விட பாதிப்புகளை ஆய்வு செய்ததா? மரங்கள் பறவைகளின் வீடுகள். நீர்நிலைகள் தண்ணீரை பாதுகாப்பதற்கு மட்டுமல்ல; பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தச் சூழலியலையும் பாதுகாக்க வேண்டும்,’’ என்றார்.
மாநகராட்சி அதிகாரிகள் மரத்துண்டுகளை பறிமுதல் செய்து, 2 லாரிகளையும், 2 பொக்லைன் இயந்திரங்களையும் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
‘சட்ட நடவடிக்கை’
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சீமை கருவேல மரங்கள் வெட்டுவதற்கே அனுமதி தரப்பட்டது.
அனுமதிக்கு மாறாக ஏலதாரர்கள் செயல்பட்டனர். நாட்டு கருவேல மரங்களை வெட்டக் கூடாதென ஏற்கனவே அறிவுறுத்தினோம். அதையும் மீறி வெட்டியுள்ளனர். அதனால், டெண்டர் கேன்சல் செய்யப்படும். எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன, அதன் மதிப்பு எவ்வளவு என வனத்துறை மூலம் மதிப்பீடு செய்து அபராதம் விதிக்கப்படும். ஏலதாரர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
