/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை ஜனாதிபதி நிகழ்ச்சியில் அத்துமீறி நுழைந்த இருவரும் ஜாமினில் விடுவிப்பு
/
துணை ஜனாதிபதி நிகழ்ச்சியில் அத்துமீறி நுழைந்த இருவரும் ஜாமினில் விடுவிப்பு
துணை ஜனாதிபதி நிகழ்ச்சியில் அத்துமீறி நுழைந்த இருவரும் ஜாமினில் விடுவிப்பு
துணை ஜனாதிபதி நிகழ்ச்சியில் அத்துமீறி நுழைந்த இருவரும் ஜாமினில் விடுவிப்பு
ADDED : அக் 30, 2025 12:57 AM

கோவை: இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று முன்தினம் கோவை வந்தார். மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருவதற்காக, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, நாலாபுறமும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
துணை ஜனாதிபதி வரும் நேரத்தில், பாதுகாப்பை மீறி, ஒரு வழிப்பாதையில் இருவர் ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அதையும் மீறி, தப்பிச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு அவசர அவசரமாக போலீஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், சிறிது சிறிதாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருந்ததாக, தவறான தகவல் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இச்சூழலில், மதுபோதையில் ஸ்கூட்டர் ஓட்டியதாக, கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த முகமது ஆஷிக், 24, பின்னால் அமர்ந்திருந்த, அதே பகுதியை சேர்ந்த அனீஷ் ரகுமான், 25 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது பி.என்.எஸ்., 281 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்), 125(a) (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்), மோட்டார் வாகனச்சட்டம், 185 (குடிபோதையில் வாகனம் ஒட்டுவது), 194(D) (ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்), 177 (போக்குவரத்து விதிகளை மீறுதல்), 184(e) (வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துதல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இப்பிரிவுகள் ஜாமினில் வரக்கூடியவை. அதனால், முகமது ஆஷிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமினிலும், அனீஷ் ரகுமான் ஸ்டேஷன் ஜாமினிலும் விடுவிக்கப்பட்டனர்.
துணை ஜனாதிபதி வருகையின்போது, பாதுகாப்பு வளையத்தை மீறி, நுழைந்த இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல், ஜாமினில் வெளியே வரும் விதத்தில் வழக்கு பதிந்திருப்பதற்கு பா.ஜ.வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக, அத்துமீறிச் சென்ற இருவரில் ஒருவர் முகத்தை மறைத்து பேசுவதுபோல், 47 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ, போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. போலீசாரின் இச்செயலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

