/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாறாத உடுமலை ரயில்வே ஸ்டேஷன் நிலை... கிடப்பில் போடப்பட்ட பயணியரின் கோரிக்கை
/
மாறாத உடுமலை ரயில்வே ஸ்டேஷன் நிலை... கிடப்பில் போடப்பட்ட பயணியரின் கோரிக்கை
மாறாத உடுமலை ரயில்வே ஸ்டேஷன் நிலை... கிடப்பில் போடப்பட்ட பயணியரின் கோரிக்கை
மாறாத உடுமலை ரயில்வே ஸ்டேஷன் நிலை... கிடப்பில் போடப்பட்ட பயணியரின் கோரிக்கை
ADDED : ஏப் 23, 2024 10:01 PM

உடுமலை : உடுமலை ரயில்வே ஸ்டேஷன் கடந்த நிதியாண்டை விட அதிக வருவாய் ஈட்டியுள்ளது; பயணியர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்கள் எதிர்பார்க்கும் ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கீழ், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்ற பிறகு, இவ்வழித்தடத்தில், கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, ரயில்கள் இயக்கப்படாத நிலையிலும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ளது. அதே போல், ஆண்டு வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மதுரை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ரயில்வே ஜங்சன் மற்றும் ஸ்டேஷனில் கடந்த நிதியாண்டில், பயணியர் எண்ணிக்கை மற்றும் வருவாய் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உடுமலை ரயில்வே ஸ்டேஷனை கடந்த ஓராண்டில், 5 லட்சத்து 23 ஆயிரம் பயணியர் பயன்படுத்தியுள்ளனர். ஆண்டு வருமானமாக, 4 கோடியே 70 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
மதுரை ரயில்வே கோட்டத்தில், வருவாய் அடிப்படையில், 21வது இடத்தை உடுமலை பிடித்துள்ளது. பட்டியலில், 6 ரயில்வே ஜங்ஷன் இடம் பிடித்துள்ள நிலையில், வருவாயில், உடுமலை முக்கிய பங்கு வகித்துள்ளது.
கடந்தாண்டை விட ஸ்டேஷனை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கையும், வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், பல அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வசதிகள் இல்லை
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பயணியருக்கு போதிய குடிநீர் வசதியில்லை. குழாய்கள் அனைத்தும் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதே போல், பிளாட்பார்மில் நிழற்கூரை வசதியில்லாததால், பயணியர், வெயிலிலும், மழையிலும் ரயிலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. ஸ்டேஷனின் மறுபக்கம் புதர் மண்டி, சமூக விரோத மையமாக காணப்படுகிறது.
அகல ரயில்பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆண்டுதோறும் வருவாய் அதிகரித்து வரும் நிலையில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில்கள் தேவை
பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார் ரயில்களுக்கு பயணியரிடம் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக சென்னை ரயிலில், வார இறுதி நாட்களில், நுாற்றுக்கணக்கான பயணியர் உடுமலையில் இருந்து செல்கின்றனர்.
எனவே, கூடுதலாக பெட்டிகளை இணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்தல்; மங்களூர் - ராமேஸ்வரம் வாராந்திர ரயில், மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி வாரம் இரு முறை ரயில் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றினால், உடுமலை சுற்றுப்பகுதி மக்கள் பயன்பெறுவார்கள். மதுரை கோட்டத்துக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.

