/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடை பொங்கியது கலெக்டர் ஆபீஸ் முன் 'அய்யே'
/
பாதாள சாக்கடை பொங்கியது கலெக்டர் ஆபீஸ் முன் 'அய்யே'
பாதாள சாக்கடை பொங்கியது கலெக்டர் ஆபீஸ் முன் 'அய்யே'
பாதாள சாக்கடை பொங்கியது கலெக்டர் ஆபீஸ் முன் 'அய்யே'
ADDED : பிப் 17, 2024 02:11 AM

கோவை:கோவை கலெக்டர் அலுவலகம் முன், பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் பொங்கி, ரோட்டில் வழிந்தோடியது. அவ்வழியாக சென்றவர்கள், மூக்கை பொத்திச் சென்றனர்.
கோவையின் மத்திய பகுதியான, ஸ்டேட் பாங்க் ரோட்டில் கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர், எஸ்.பி., கோட்டாட்சியர் அலுவலகங்கள், தீயணைப்பு துறை மற்றும் பி.எஸ்.என்.எல்., அலுவலகம், ஸ்டேட் பாங்க் பிரதான கிளை, போலீஸ் மியூசியம் அமைந்திருக்கின்றன. இதனால், இப்பகுதியை அதிகமான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
இவ்வழித்தடத்தில் மாநகராட்சியால் பதிக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய், 30 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதனால், கழிவு நீர் அதிகமாக வரும்போது, அழுத்தம் தாங்காமல், மேனுவல் பகுதியில் பொங்கி, ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடுவது வாடிக்கையாக நடக்கிறது.
கலெக்டர் அலுவலகம் எதிரே, போலீஸ் கமிஷனர் அலுவலக சுற்றுச்சுவர் அருகே உள்ள பாதாள சாக்கடை மேனுவலில் இருந்து, நேற்று கழிவு நீர் பொங்கி, அப்பகுதியில் தேங்கியது.
ஸ்டேட் பாங்க் ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடிச் சென்றதால், அவ்வழியாகச் சென்றவர்கள் மூக்கை பொத்திக் கொண்டு கடந்தனர்.
கோவையை 'ஸ்மார்ட் சிட்டி'யாக்க, மத்திய - மாநில அரசுகள் இணைந்து, 1,000 கோடி ரூபாயை ஒதுக்கி, மாநகராட்சி செலவழித்திருக்கிறது.
ஆனால், கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர், எஸ்.பி., அலுவலகங்கள் அமைந்திருக்கிற ரோட்டில், கழிவு நீர் சீராக செல்ல வழித்தடம் அமைக்காமல், திறந்தவெளியில் ரோட்டில் வழிந்தோட விடுவது, மாநகராட்சிக்கு முறையாக வரி செலுத்தும் பொதுமக்களை, அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.