ஏ.டி.எம்.,மையத்துக்கு பூட்டு: தொழிலாளர்கள் அதிருப்தி
ஏ.டி.எம்.,மையத்துக்கு பூட்டு: தொழிலாளர்கள் அதிருப்தி
UPDATED : நவ 10, 2026 04:51 PM
ADDED : நவ 10, 2026 04:01 PM

வால்பாறை: வால்பாறை, அய்யர்பாடி பகுதியில் பூட்டி கிடக்கும் ஏ.டி.எம்., மையத்தால் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, பல ஆண்டுகளாக வங்கி வாயிலாக மாதம் தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் பணத்தை எளிதில் எடுக்க வசதியாக, வால்பாறை நகர், முடீஸ், அய்யர்பாடி, வாட்டர்பால்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏ.டி.எம்.,வங்கி அமைக்கபட்டுள்ளது.
இது தவிர, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம்., ஒன்றும் செயல்படுகிறது. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள அய்யர்பாடி போஸ்ட் ஆபீஸ் எதிரில் அமைக்கப்பட்டுள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., மையம் ஓராண்டுகளாக காட்சிப்பொருளாக உள்ளது.
இது குறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது:
அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் வசதிக்காக இங்கு தனியார் வங்கி சார்பில் ஏ.டி.எம்.,மையம் அமைக்கப்பட்டது. இதனால், இப்பகுதி தொழிலாளர்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணியரும் பயன்பெற்றனர்.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக ஏ.டி.எம்., மையம் பூட்டியே கிடப்பதால் தொழிலாளர்கள் பணம் எடுக்க முடியாமல், ஏழு கி.மீ.,தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் சார்பில் அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில், புதிய ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
