/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்
/
கோவையில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்
ADDED : ஜூன் 09, 2025 10:53 PM

-நமது நிருபர் குழு-
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பட, கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில், நேற்று, முருக கடவுளின் பிறந்த தினம் என கருதப்படும் வைகாசி விசாகம் விழா, வெகு சிறப்பாக நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும், வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
இந்தாண்டு, வைகாசி விசாகம் விழா, நேற்று வெகு சிறப்பாக நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தொடர்ந்து, பகல், 2:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுப்பிரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வடவள்ளியை சேர்ந்த பக்தர்கள், பால்குடம் எடுத்து வந்தனர். இருசக்கர வாகனங்கள் மட்டும் மலைப்பாதையில் அனுமதிக்கப்பட்டன.
n சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு, வேள்விச்சாலையில் மஹாகணபதி ஹோமம் நடந்தது. ஆறுமுக சுப்ரமணியர் ஹோமங்களை தொடர்ந்து, கருவறையில் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சகலதிரவிய அபிஷேகங்கள் நிறைவு செய்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ராஜ அலங்காரத்தில் வெற்றிவேலுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
n சாய்பாபா காலனி அம்மாசை கோனார் வீதியில், அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
n ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலிலுள்ள முருகன் சன்னிதி, கோனியம்மன் கோவில் வளாகத்திலுள்ள கல்யாணசுப்ரமணிய சுவாமி, கவுண்டம்பாளையம் சாந்திதுர்கா பரமேஸ்வரி கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.