/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வைகாசி விசாகம்; கோவில்களில் சிறப்பு பூஜை
/
வைகாசி விசாகம்; கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : ஜூன் 09, 2025 09:58 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில், முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக பக்தர்கள் வழிபடுகின்றனர். நேற்று, வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் காலையில், அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் திரளாக பங்கேற்று, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில், சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
* சேரன் தொழிலாளர் காலனி செல்வவிநாயகர் கோவிலில், பாலமுருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி உற்சவ மூர்த்திக்கு காலை, 8:00 மணிக்கு அபிேஷகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார்.
* ஜமீன் முத்துார் பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வால்பாறை
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையும், 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, மஞ்சள், பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 64 வகையான பொருட்களை கொண்டு அபிேஷக பூஜை நடந்தது.
* இதே போல் முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் வைகாசி விசாக சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.
உடுமலை
உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளையொட்டி முருகனுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. ருத்தரப்ப நகர் சித்தி விநாயகர் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. சிறப்பு ேஹாமத்துடன் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
* காந்திநகர் வரசித்தி விநாயகர் கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. போடிபட்டி பாலமுருகன் கோவில் உட்பட சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.