/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவில் வசந்தபஞ்சமி திருவிழா
/
மாரியம்மன் கோவில் வசந்தபஞ்சமி திருவிழா
ADDED : பிப் 03, 2025 11:24 PM

வால்பாறை; வால்பாறை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாணத்தில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில், 41ம் ஆண்டு வசந்த பஞ்சமி திருவிழா, கடந்த மாதம், 29ம் தேதி கொடியேற்றுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும், காலை, மாலை நேரத்தில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு நடுமலை ஆற்றில் இருந்து, சக்தி கும்பம் எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலிலிருந்து, எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் இந்திராநகர் மகளிர் அணியினர் திருமண சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
அதன் பின், காலை, 11:45 மணிக்கு மாரியம்மனுக்கும், சிவபெருமானுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, முன்னாள் நகராட்சி தலைவர் கணேசன் ஆகியோர் அன்னதான விழா துவக்கி வைத்தார்.
விழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.