/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கு வாகன கணக்கெடுப்பு! 101 இடங்களில் களமிறங்கிய நெடுஞ்சாலைத்துறை
/
சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கு வாகன கணக்கெடுப்பு! 101 இடங்களில் களமிறங்கிய நெடுஞ்சாலைத்துறை
சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கு வாகன கணக்கெடுப்பு! 101 இடங்களில் களமிறங்கிய நெடுஞ்சாலைத்துறை
சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கு வாகன கணக்கெடுப்பு! 101 இடங்களில் களமிறங்கிய நெடுஞ்சாலைத்துறை
ADDED : மே 14, 2025 11:40 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் மொத்தம், 101 இடங்களில், சாலை மேம்பாட்டு பணிகளுக்காக, வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து குறித்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகன கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. வாகன பெருக்கத்துக்கேற்ப சாலை அகலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பொள்ளாச்சி கோட்டத்தில் நேற்று நெடுஞ்சாலைத்துறை வாயிலாக வாகனங்கள் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்நிலையம், நகராட்சி அலுவலகம், திருவள்ளுவர் திடல், வடக்கிபாளையம் பிரிவு உள்ளிட்ட, 34 இடங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது.
கிணத்துக்கடவு உட்கோட்டத்துக்கு உட்பட்ட வடசித்துார், செஞ்சேரி பிரிவு, காமநாயக்கன்பாளையம், நெகமம் உள்ளிட்ட, 46 இடங்கள்; ஆனைமலையில், 21 இடங்கள், என, மொத்தம், 101 இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன.
ரோட்டில் செல்லும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு இடத்துக்கு, இரண்டு பேர் வீதம் பணியமர்த்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பஸ்கள், லாரிகள், டிப்பர் போன்ற கனரக வாகனங்கள் இயக்கம் குறித்து கணக்கெடுத்து, தனித்தனியாக பதிவு செய்கின்றனர்.
இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முக்கிய சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு, மூன்று ஆண்டுளுக்கு சாலைகள் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
சாலையை பயன்படுத்தும் வாகன எண்ணிக்கையை பொறுத்து, ஒரு வழிச்சாலையை, இருவழிச்சாலையாகவும், இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்படும்.
மேலும், பாலங்கள் தேவைப்படுகிறதா; இல்லை தற்போது உள்ள சாலையே போதுமானதாக உள்ளதா; இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா என, இந்த கணக்கெடுப்பை கொண்டே முடிவு செய்யப்படும்.
சாலையின் தன்மையை உறுதி செய்வதற்கும், தடிமனாக தார் போடுவதற்கும் இந்த ஆய்வு முக்கிய பங்கு வகிக்கும்.
நகரங்கள் மட்டுமல்லாது, கிராமங்களில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுக்கப்படுகிறது. கடந்த, 12ம் தேதி முதல் துவங்கிய கணக்கெடுப்பு பணிகள் வரும், 18ம் தேதி வரை நடைபெறும்.
இதை தொடர்ந்து வாகனங்கள் கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டிய இடங்களை ஆய்வு செய்து அரசுக்கு நிதி கேட்டு கருத்துரு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் தீவிரமாகவும், முறையாகவும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.