/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெங்கடேச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்
/
வெங்கடேச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்
ADDED : பிப் 05, 2025 12:18 AM
அன்னுார்; மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
மேலத்திருப்பதி என்று அழைக்கப்படும், 400 ஆண்டு பழமையான மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில், 58ம் ஆண்டு தேர்த் திருவிழா துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு நகர சோதனை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு, பெருமாளுக்கு திருகாப்பு கட்டப்பட்டது. காலை 8:00 மணிக்கு வேள்வி பூஜையும் கொடியேற்றமும் நடந்தது. கோவில் செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். பெருமாள் அன்ன வாகனத்தில் உலா வந்து அருள் பாலித்தார்.
வரும் 7ம் தேதி வரை, தினமும் காலை 7:00 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து அருள் பாலிக்கிறார்.
வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு, அம்மன் அழைத்தலும், இதையடுத்து, சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. வரும் 9ம் தேதி இரவு யானை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது.
வரும் 10ம் தேதி காலை 8:00 மணிக்கு பெருமாள் தேருக்கு எழுந்தருகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. வரும் 11ம் தேதி இரவு பரிவேட்டையும், வரும் 12ம் தேதி இரவு தெப்ப தேரோட்டமும் நடக்கிறது.