/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 07, 2025 09:24 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே புதிதாக சீரமைத்த விஜய விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
காரமடை அடுத்த புஜங்கனூர் அருகே விஜயநகரத்தில், விஜய விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் புதிதாக கன்னிமூல கணபதி சன்னதி, முருகப்பெருமானுக்கு கோபுரம், முன் மண்டபம், பரிவார தெய்வங்கள் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோபுரத்திற்கு வர்ணம் பூசி மடப்பள்ளி மற்றும் சுற்றுத்தளம் அமைத்தல் உள்பட திருப்பணிகள் நடந்தன. இக்கோவில் கும்பாபிஷேகம் விழா, முதல் நாள் காலை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, 108 மூலிகை பொருட்கள் ஹோமம், தீபாராதனை ஆகிய பூஜைகளுடன் துவங்கியது.
தொடர்ந்து தீர்த்தக்குடங்கள் மற்றும் முளைப்பாளிகையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாலையில் வாஸ்து சாந்தி பூஜையும், முதற்கால யாக வேள்வி பூஜையும் நடந்தன.
இரண்டாம் நாள் காலை விநாயகர் பூஜையுடன், இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின், 8:30 மணிக்கு கோபுரங்களுக்கும், மூலவர் சுவாமிகள் மீதும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
யாக வேள்வி பூஜைகளையும், கும்பாபிஷேகத்தையும் ஜெயபாலசுப்பிரமணிய குருக்கள், விவேக் சிவம் அர்ச்சகர் ஆகியோர் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.