/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரச்னை இல்லாமல் நடக்கிறது வாக்காளர் பட்டியல் திருத்த பணி
/
பிரச்னை இல்லாமல் நடக்கிறது வாக்காளர் பட்டியல் திருத்த பணி
பிரச்னை இல்லாமல் நடக்கிறது வாக்காளர் பட்டியல் திருத்த பணி
பிரச்னை இல்லாமல் நடக்கிறது வாக்காளர் பட்டியல் திருத்த பணி
ADDED : நவ 04, 2025 11:57 PM

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டசபை தொகுதிகளில், வீடுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்த கணக்கெடுப்பு நேற்று துவங்கியது. இது குறித்து கள ஆய்வு மேற்கொண்டோம்.
கோவை தெற்கு சட்ட சபை தொகுதி, மாநகராட்சி மத்திய மண்டலம், 66வது வார்டு அம்மன் குளம் ஏரிமேடு பகுதியில் அங்கன்வாடி ஆசிரியரும், புலியகுளம் அரசு மகளிர் கல்லுாரி பூத் எண் 9 அலுவலருமான சோபியா, காலை 8 மணிக்கு பணிகளை துவக்கினார்.
கையில் விண்ணப்பங்கள் மற்றும் மொபைல் போனுடன் வீடு, வீடாக சென்றார். கதவை தட்டி வாக்காளர்களை சந்தித்தார். வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு வந்திருப்பதாகவும், அதற்கான படிவங்களை வழங்குவதாகவும் கூறினார்.
அடுத்து, மொபைலில் பி.எல்.ஓ. ஆப்பை தொட்டு, 'ஓப்பன்' செய்தார். வாக்காளர் பெயரையும், ஆர்.ஓ.ஜி. நம்பரையும் பதிவிட்டார். ஆப்பில் 'ப்ரொசீட்' என்று வந்தது. அடுத்து 'இ.சி.எஸ். பார்ம் டிஸ்டிரிபியூட்டட்' என்று மெசேஜ் வந்தது. அதை விண்ணப்பத்திலுள்ள, 'க்யூ ஆர்' கோடுஸ்கேன் செய்து, விண்ணப்பத்தை வாக்காளரிடம் வழங்கினார்.
இரண்டு விண்ணப்பங்களை வழங்கிவிட்டு, ”இதில் ஏதேனும் மாற்றங்களோ திருத்தங்களோ இருக்கிறதா இருந்தால் பதிவு செய்து வையுங்கள்; இரண்டு நாளில் வந்து திரும்ப பெற்றுக் கொள்கிறேன்,” என்று சொல்லி திரும்பினார்.
சோபியா, நமது நிருபரிடம் கூறியதாவது:
என் பொறுப்பிலுள்ள 9ம் எண் பூத்தில் 1,192 வாக்காளர்கள் உள்ளனர். அனைவருக்கும் வியாழக்கிழமைக்குள் படிவங்களை கொடுக்க வேண்டும்.தினமும் 330 பேர் வீதம் கொடுக்க திட்டமிட்டுள்ளேன். பெரும்பாலான மக்கள், எனக்கு தெரிந்தவர்கள் என்பதால், எளிதாக கொடுத்து வாங்கி விடுவேன்.
பி.எல்.ஓ. செயலியை கையாள்வதில், எந்த சிரமமும் இல்லை; வேகமாக செயல்படுகிறது. காலை 8 மணிக்கு பணி துவங்கினேன். மதியம் 1 முதல் 2 மணி வரை பூத்தில் இருப்போம். பின் மீண்டும் பணி துவங்கி மாலை 6 மணி வரை தொடருவேன். திட்டமிட்ட நேரத்துக்குள் பணிகளை நிறைவு செய்வேன். எந்த நெருக்கடியும் இல்லை.
இவ்வாறு, சோபியா கூறினார்.
கோவை மாவட்டம் முழுக்க வாக்காளர் திருத்த பணி விறுவிறுப்பாக நடக்கிறது. கலெக்டர் பவன் குமார், வருவாய் அலுவலர் ஷர்மிளா கண்காணிக்கின்றனர். வருவாய் பணியாளர்கள், ஆசிரியர்கள் என்று பலரும் பணியில் ஈடுபட்டனர். படிவங்கள் பற்றாக்குறை என்று எந்த புகாரும் வரவில்லை.
செயலி வேகம் இல்லை என்பது போன்ற புகார் எதுவும் வரவில்லை. அலுவலர்கள் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது; உடனுக்குடன் அதிகாரிகள் தலையிட்டு தீர்த்து வைத்ததால், பணியில் தொய்வு ஏற்படவில்லை.

