/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமூக தணிக்கை அறிக்கை தரவில்லை: வார்டு உறுப்பினர்கள் புகார்
/
சமூக தணிக்கை அறிக்கை தரவில்லை: வார்டு உறுப்பினர்கள் புகார்
சமூக தணிக்கை அறிக்கை தரவில்லை: வார்டு உறுப்பினர்கள் புகார்
சமூக தணிக்கை அறிக்கை தரவில்லை: வார்டு உறுப்பினர்கள் புகார்
ADDED : பிப் 16, 2024 11:32 PM
அன்னுார்;'சமூகத் தணிக்கை அறிக்கை தரவில்லை,' என ஊராட்சி நிர்வாகம் மீது வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அன்னுார் ஒன்றியத்தில், நேற்று நான்கு ஊராட்சிகளில், 100 நாள் வேலைத்திட்ட சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
அல்லப்பாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் மூத்த உறுப்பினர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் வெங்கிடுபதி முன்னிலை வகித்தார். ஒன்றிய பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி பங்கேற்றார்.
கூட்டத்தில், கடந்த நிதி ஆண்டில், அல்லப்பாளையம் ஊராட்சியில், 39 லட்சத்து 21 ஆயிரத்து 781 ரூபாய் மதிப்புள்ள 47 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் துணைத் தலைவர் நந்தகுமார், வார்டு உறுப்பினர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில், துணைத் தலைவர் நந்தகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிலர் கூறுகையில்,' நூறு நாள் வேலை திட்ட தணிக்கை அறிக்கை நகல் கேட்டபோது எங்களுக்கு தர மறுத்து விட்டனர். மத்திரெட்டிபாளையத்தில், 150 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் இங்கு தெருவிளக்குகள் இல்லை. பஸ் வசதி இல்லை. அல்லப்பாளையம் காலனியில் கழிவுநீர் வடிகால் கட்டாததால் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. போர்வெல் நீர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.
ருத்திரியம்பாளையம்மேற்கு வீதியில் கழிவு நீரால் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ருத்ராம்பாளையத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 21 குடும்பங்களுக்கு பட்டா கோரி போராடி வருகிறோம். ஊராட்சி வரவு செலவு வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதில்லை,' என புகார் தெரிவித்தனர்.
தலைவர் வெங்கிடுபதி கூறுகையில், ''எழுத்துப்பூர்வமாக கேட்டால் தணிக்கை அறிக்கை வழங்கப்படும். போர்வெல்நீர் ஆற்று நீர் இரண்டும் மாற்றி மாற்றி சப்ளை செய்யப்படுகிறது. காலனியில் இருந்து கழிவு நீர் செல்வதற்கு பட்டா நிலங்களில் வசிப்போர் ஆட்சேபனை தெரிவிப்பதால் உறிஞ்சுகுழி அமைக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,'' என்றார்.