/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரோடையில் கழிவு; மக்கள் அதிருப்தி
/
நீரோடையில் கழிவு; மக்கள் அதிருப்தி
ADDED : ஜன 05, 2024 11:24 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள மாமாங்கம் நீரோடையில், இறைச்சி கழிவு மற்றும் குப்பை கொட்டுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு - வடசித்துார் ரோட்டில் குடியிருப்புகளின் எண்ணிக்கையும், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இங்கு ரயில்வே ஸ்டேஷனும் இருப்பதால் இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் பயணியர்கள் அதிகளவு நடந்து செல்கின்றனர்.
மேலும், இந்த வழித்தடத்தில் தனியார் நிறுவனங்கள் இருப்பதால் போக்குவரத்து நிறைந்த பகுதியாகவே உள்ளது.
இந்த ரோட்டில், மாமாங்கம் நீரோடை அமைந்துள்ளது. இதில், மழை காலத்தில் அதிகளவு நீர் தேங்கி இருக்கும். இங்கு மீன்கள் இருப்பதால், மீன் பிடிக்க சிறுவர்கள் அதிகளவு வந்து செல்வார்கள். மேலும், இந்த நீரோடை முழுவதும் செடிகள் வளர்ந்து காட்சியளிக்கிறது.
இந்நிலையில், நீரோடையில் சிலர் குப்பை கொட்டுகின்றனர். இறைச்சி கடை கழிவும் நீரோடையில் குவிக்கப்படுகிறது. இதனால், இங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த நீரோடையின் எதிரே, தனியார் மருத்துவமனை இருப்பதால், இங்கு சிகிச்சைக்கு வருவோர், துர்நாற்றத்தால் பாதிக்கின்றனர்.
நீர்நிலையை பாதுகாக்கவும், இங்கு குப்பை கொட்டாமல் தடுக்கவும் பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையும் மீறி சிலர் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.
எனவே, இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க, நீரோடை அருகில் உயரமாக தடுப்பு அமைக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.