/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்
/
அரசு பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்
ADDED : ஜூலை 03, 2025 08:23 PM

வால்பாறை; வால்பாறையில் உள்ள பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கும் விதமாக 'வாட்டர் பெல்' திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில், வால்பாறையில் உள்ள அரசு பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வால்பாறை நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியை கலைசெல்வி துவக்கி வைத்து பேசும் போது, ''நாள் தோறும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக காலை, 11:00, மதியம் 1:00, மாலை, 3:00 மணி என நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் கண்காணிக்கின்றனர். தற்போது பருவமழை பெய்யும் நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் மாணவர்கள் குடிக்க சுடுதண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் தண்ணீர் குடிப்பதன் அவசியம் குறித்தும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.
நெகமம்-
* நெகமம் அருகே உள்ள, மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 'வாட்டர் பெல்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் தண்ணீர் குடிப்பதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள், தண்ணீர் குறைவாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள், உடல் ரீதியான பிரச்னைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
* சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும், என, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தலைமை ஆசிரியர் ஜெயந்தி தண்ணீர் குடிப்பதற்காக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.