/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுவரோவியம் வரையும் கடைசி தலைமுறை நாங்கதான்!
/
சுவரோவியம் வரையும் கடைசி தலைமுறை நாங்கதான்!
ADDED : நவ 16, 2025 12:49 AM

பா ரதி பார்க் சாலை. வனக்கல்லூரி வளாக சுற்றுச் சுவரில், பச்சையும் சிவப்புமாக உருவம் பெற்றுக் கொண்டிருந்தது, 'ஏசியன் பிளவர் மான்டிஸ்'.
கி.மீ., கணக்கில் நீண்டிருந்த அந்த சுவர்களில் விதவிதமான பட்டாம்பூச்சி, எறும்பு, பூச்சி என கானுயிர்கள் ஓவியங்களாக இடம்பெற்றிருந்தன. அருகே அவற்றின் பெயரும்.
வனத்துறை சார்பில் அந்த ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார் ராஜா. அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்...
சொந்த ஊர் ரத்தினபுரி. 30 வருசமா வரையறேன். அப்பா ஆர்டிஸ்ட். ஆனா, அவர் எழுத்துகளை மட்டும்தான் வரைவார். சுவரோவியங்கள், பதாகைகள்னு எழுதுவார்.
சின்ன வயசுல இருந்து அப்பாவ பார்த்து வளர்ந்ததால, 10, 12 வயசுல நானும் வரைய ஆரம்பிச்சுட்டேன். பள் ளிக்கூட கரும்பலகைக்கு வண்ணம் பூசுனதுதான், என்னோட முதல் பிரஷ் ஒர்க்.
80, 90களில் 'இமேஜ் ஆர்டிஸ்ட்'களுக்கு டிமாண்ட் இருந்தது. படம் வரையறவங்க அவ்வளவு சீக்கிரம் வரமாட்டாங்க.
அப்பாவோட ஆர்டர்கள முடிக்க சிரமமா இருந்துச்சு. அதனால, நாமே வரையலாம்னு ஆரம்பிச்சதுதான், இன்னைக்கு வரைக்கும் ஆறாவது விரல் மாதிரி பிரஷ் கையோட ஒட்டிக்கிச்சு.
எல்லாவித பெயின்டிங்கும் வரைவேன். ஆர்ட் டைரக்டராவும் இருக்கேன். விழாக்களுக்கு செட்டிங் போடுவேன். இப்படி சுவரோவியம் வரையற, கடைசி தலைமுறை நாங்கதான்னு நினைக்கிறேன்.
ஓவிய வகுப்புகளுக்கு போய் கத்துக்கலாம். ஆனா, இதுமாதிரி வரைய நிறைய பொறுமை, காத்திருப்பு, கள அனுபவம் வேணும். எந்த ஒரு ஓவியமும் முற்றுப்பெற்றதல்ல. அது ஒரு முடிவுறா கலை.
சுவாரசியமாக அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது, முழுமையாக உருப்பெற்றிருந்தது இடையன் பூச்சி.

