ADDED : ஆக 20, 2025 09:24 PM

ஸ்ரீதர், உடுமலை: மழை நீர் சேகரிப்பு மட்டுமே, சரிந்துள்ள நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவும். இத்திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டிய அரசுத்துறையினரே அலட்சியமாக உள்ளது வேதனையளிக்கிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பிக்க வேண்டும். இத்திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் கட்டமைப்புகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய, தன்னார்வலர்களை கொண்ட சிறப்புக்குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். இத்தகைய பணிகளை தொய்வின்றி மேற்கொண்டால் மட்டுமே, மழை நீரை முறையாக சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க முடியும்.
ஜெகதீஷ், தாவளம்: மழைநீர் சேகரிப்பால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். அருமையான இத்திட்டம் முறையாக பின்பற்றாததால், பல இடங்களில் மழைநீர் வீணாக ரோட்டில் சென்று சாக்கடை கால்வாயில் கழிவுநீருடன் கலக்கிறது. அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். இதனால், நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கலாம்.அரசு அலுவலகங்களில் இந்திட்டத்தை முன்மாதிரியாக செயல்படுத்த வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
சசிக்குமார், கிணத்துக்கடவு: ஒரு சில அரசு அலுவலக கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு குழாய்கள் பூமிக்கு அடியில் தொட்டி செல்லாமல், திறந்த வெளியில் காணப்படுகிறது. இதனால், திறந்தவெளியில் மழைநீர் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசவும், கொசு உற்பத்தியாக அதிக வாய்ப்புள்ளது. வீடு தோறும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. ஆனால், அரசு அலுவலக கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு முறைப்படுத்தாமல் இருப்பது சரியில்லை. இதை மாவட்ட நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வினு, வால்பாறை: வால்பாறையில் ஆண்டு தோறும் பருவமழை அதிகளவில் பெய்வதால், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதில் அதிகாரிகள் போதிய அக்கறை காட்டவில்லை. மழை நீர்சேகரிப்பின் அவசியம் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு அலுவலகங்கள் மற்றும் புதியதாக கட்டப்படும் வீடுகளில் மழை நீர்சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.