ADDED : நவ 01, 2025 05:28 AM

கோவை: கோவையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில், முதலிடம் பிடித்த அணியினர், மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், 'பசுமையும், பாரம்பரியமும்' என்ற தலைப்பில் நான்கு நாட்கள், இந்த கலைத்திருவிழா நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து 3,387 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 34 பிரிவுகளிலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 14 பிரிவுகளிலும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 18 பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. நடனம், ஓவியம், நாடகம், மணல் சிற்பம், மாறுவேடம் உள்ளிட்ட 100 பிரிவுகளில் மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
வாகராயம்பாளையம் பள்ளி 'வாவ்' வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மேல்நிலை பிரிவில் இலக்கிய நாடகம், மணல் சிற்பம், ஓவியம், நாட்டுப்புற நடனம் (தனி) ஆகியவற்றில் முதலிடமும்; பொம்மலாட்டம், களிமண் சிற்பம் ஆகியவற்றில் இரண்டாம் இடமும்; தனிநபர் நடிப்பில் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
9 மற்றும் 10ம் வகுப்பு பிரிவில் இலக்கிய நாடகம், களிமண் சிற்பம் ஆகியவற்றில் முதலிடம் பெற்றனர். அதேபோல், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி 9, 10ம் வகுப்பு மாணவர் நடனப்பிரிவில் முதலிடமும், சரவணம்பட்டி ஷாஜகான் நகர் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பிடித்துள்ளனர்.
அவினாசிலிங்கம் பள்ளி அபாரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் பிரிவில், அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், அனைத்து பிரிவு போட்டிகளிலும் அதிகளவில் பங்கேற்றனர். இதில், 80 மாணவிகள் முதலிடத்தையும், 21 மாணவிகள் இரண்டாம் இடத்தையும், 3 மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மாவட்ட அளவில் தனி நபர் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர்களும், குழு பிரிவில் முதலிடம் பிடித்த அணிகள் என, சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
மாநிலப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, 'கலையரசன்', 'கலையரசி' பட்டங்கள் வழங்கப்படும். அவர்கள் வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவுக்கும், அழைத்து செல்லப்படுவர்.

