/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு போலீஸ் ஸ்டேஷன் நல்லுாருக்கு இடமாற்றம் :சொந்த கட்டடம் கட்ட இடம் தேடுறாங்க
/
மேற்கு போலீஸ் ஸ்டேஷன் நல்லுாருக்கு இடமாற்றம் :சொந்த கட்டடம் கட்ட இடம் தேடுறாங்க
மேற்கு போலீஸ் ஸ்டேஷன் நல்லுாருக்கு இடமாற்றம் :சொந்த கட்டடம் கட்ட இடம் தேடுறாங்க
மேற்கு போலீஸ் ஸ்டேஷன் நல்லுாருக்கு இடமாற்றம் :சொந்த கட்டடம் கட்ட இடம் தேடுறாங்க
ADDED : நவ 28, 2025 04:58 AM

பொள்ளாச்சி: தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் வாயிலாக, 76.15 கோடி ரூபாய் செலவில் புதிதாக குடியிருப்புகள் கட்டும் பணி நடக்கிறது. எட்டு இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.ஐ.,க்கள், 194 போலீசார் என மொத்தம், 222 குடியிருப்பு கட்டப்படுகிறது.
இங்கு, காலியிடமாக பதிவு செய்யப்பட்ட பகுதியில், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்படுவதால், ஸ்டேஷனை இடமாற்றம் செய்ய காவலர் வீட்டு வசதி வாரியம் அறிவுறுத்தியது.
பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் 1982ம் ஆண்டு முதல், போலீஸ் குடியிருப்பு கட்டடம் அருகே செயல்படுகிறது. தற்போது கட்டுமான பணிகள் நடைபெறுவதால், போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே வாடகை கட்டடத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் மாற்றுவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாடகைக்கு இடம் கிடைக்காததால், ஸ்டேஷன் இடமாற்றம் செய்யாமல் இருந்தது.
பாலக்காடு ரோட்டில், நல்லுார் கைகாட்டி அருகே ஸ்டேஷன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், 'போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணிக்காக போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம் செய்யப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்டேஷன் கட்ட இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டது,' என்றனர்.
மக்கள் கோரிக்கை! பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நல்லுார் கைகாட்டி பகுதி, தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டது. நகரத்தில் இருந்து, 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
நகரில் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் உள்ள சூழலில், இடமாற்றம் செய்ததால், பொதுமக்களுக்கு அலைச்சல் ஏற்படும். இதற்கு மாற்றாக நகரப்பகுதியிலேயே இடம் ஒதுக்கீடு செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

