/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் 'விறுவிறு!' நத்தையாக நகர்கிறது இரண்டாவது பேக்கேஜ் பணி
/
மேற்கு புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் 'விறுவிறு!' நத்தையாக நகர்கிறது இரண்டாவது பேக்கேஜ் பணி
மேற்கு புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் 'விறுவிறு!' நத்தையாக நகர்கிறது இரண்டாவது பேக்கேஜ் பணி
மேற்கு புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் 'விறுவிறு!' நத்தையாக நகர்கிறது இரண்டாவது பேக்கேஜ் பணி
ADDED : ஜன 16, 2024 11:34 PM

கோவை:கோவையில், மேற்குப்புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
11.80 கி.மீ., துாரத்துக்கு நில அளவீடு செய்து, ரோட்டின் இருபுறமும் எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. சாலையை சமன்படுத்தி, பெட்டி வடிவிலான சிறு பாலங்கள் கட்டுமான பணி துரிதகதியில் நடந்து வருகிறது. அதேநேரம், இரண்டாவது பேக்கேஜ்-க்கு நிலம் கையகப்படுத்தும் பணி மிகவும் தொய்வாக இருக்கிறது.
கோவை போக்குவரத்து போலீசார், கடந்தாண்டு மேற்கொண்ட ஆய்வில், 26 லட்சம் வாகனங்கள் இருப்பதும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்கள் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டது.
இவை தவிர, வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள், நகர் பகுதிக்குள் வந்து செல்வது தெரியவந்தது.
அதாவது, நீலகிரி மாவட்டத்துக்குச் செல்வதாக இருந்தாலும், கேரளா செல்வதாக இருந்தாலும் வாகனங்கள் கோவை நகர் பகுதிக்குள் வந்து செல்வதால் தேவையற்ற அலைச்சல், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது.
தீர்வு காண ரிங்ரோடு
அதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, நகரை கடந்து செல்ல, இரண்டு மணி நேரம் தாமதமாகிறது. இதற்கு தீர்வு காண, கோவைக்கு வெளியே புறநகரில், சுற்றுச்சாலை (ரிங் ரோடு) அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதையேற்று, 2007ல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது, மேற்குப்புறவழிச்சாலை திட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார்; 2009ல் இறுதி வடிவம் பெற்றது.
அதன்படி, கோவை - பாலக்காடு ரோட்டில் மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை, 32 கி.மீ., துாரத்துக்கு மேற்குப்புறவழிச்சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பணிகள் துவக்கம்
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் வேகமெடுத்தது. மூன்று பேக்கேஜ்களாக பிரித்து, முதல்கட்ட பணிக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டது. மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை, 11.80 கி.மீ., துாரத்துக்கு இச்சாலை ஏற்படுத்தப்படுகிறது.
தலா ஏழு மீட்டர் அகலத்துக்கு ஓடுதளம் அமைகிறது; மெட்ரோ ரயில் திட்டம் இவ்வழித்தடத்தில் எதிர்காலத்தில் இயக்க வாய்ப்பு இருந்தால், மேற்குப்புறவழிச்சாலை பாதிக்கக் கூடாது என்பதற்காக, ஐந்து மீட்டர் அகலத்துக்கு மையத்தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது.
மைல்கல் முதல் மாதம்பட்டி வரையிலான பகுதிகளில், இரு இடங்களில் மேம்பாலம், 13 இடங்களில் சிறு பாலங்கள், 17 இடங்களில் பெட்டி சிறு பாலங்கள் கட்டப்படுகின்றன. இதில், பெட்டி சிறு பாலங்கள் கட்டும் பணி துவக்கப்பட்டு, துரிதகதியில் நடந்து வருகின்றன.
சாலை அளவீடு செய்யப்பட்டு, எல்லைக்கற்கள் நடப்பட்டு, சமன் செய்யப்பட்டுள்ளன; இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட்டு இருக்கின்றன. இப்பணி, கடந்தாண்டு ஆக., மாதம் துவக்கப்பட்டது; 2025 ஆக., வரை இரு ஆண்டுகளுக்குள் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
நத்தையாக நகர்கிறது
முதல் பேக்கேஜ் பணி முடிவதற்குள், இரண்டாவது பேக்கேஜ்க்கு நிலம் கையகப்படுத்தி, தேவையான நிதி ஒதுக்கப்படும் என, மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு உறுதியளித்திருந்தார். இரண்டாவது 'பேக்கேஜ்' என்பது பேரூர், மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, சோமையம்பாளையம் கிராமத்தில் கணுவாய் வரை, 12.10 கி.மீ., துாரத்துக்கு, 37.70 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டும்.
இதில், பேரூர் மற்றும் மேற்கு சித்திரைச்சாவடியில் மட்டும் நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு உள்ளது. கலிக்கநாயக்கன் பாளையம் மற்றும் வடவள்ளியில் கையகப்படுத்தும் பணி, நத்தை வேகத்தில் நகர்ந்து வருகிறது. சோமையம்பாளையத்தில் இன்னும் வேலை துவங்கவே இல்லை.
இரண்டாவது பேக்கேஜ்க்குரிய நிலங்களை, 2023 டிச., மாதத்துக்குள் கையகப்படுத்திக் கொடுக்க, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியிருந்தார். 2024, ஜன., மாதமாகி விட்டது. இதுவரை, 40 சதவீத நிலங்களே கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
மாநில நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு, தேவையான நிலம் கையகப்படுத்திக் கொடுக்க, சிறப்பு டி.ஆர்.ஓ., நியமிக்கப்பட்டு, தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், இப்பணி படுமந்தமாக நடந்து வருகிறது.

