UPDATED : அக் 26, 2026 08:27 PM
ADDED : அக் 26, 2026 08:24 PM
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாலாங்குளத்தின் இரு கரையிலும் மேம்பாட்டு வேலை நடந்தபோது, குளத்தின் பரப்பு சுருக்கப்பட்டது. உபரி நீர் வெளியேறும் பகுதி 21 மீட்டர் உயரம் இருந்ததை 6 மீட்டராக குறைத்தனர்.
நீர் வெளியேற போதிய கட்டமைப்பு இல்லை. கரை பலவீனமாக உள்ள பகுதிகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது நடந்தால் சிவராம் நகர், ஸ்ரீநகர், ரூபா நகர், அபிராமி நகர், பூங்கா நகர், பாரி நகர், ஆல்வின் நகர், ஸ்ரீநாத் லேக் வியூ பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும்.
உபரி நீர் காந்தி நகர், போலீஸ் கந்தசாமி லைன் வீதி, மசால் லே–அவுட் வழியாக புலியகுளம் செல்லும். அங்கிருந்து மசக்காளிபாளையம் ரோட்டில் உள்ள வாய்க்காலில் பயணித்து சங்கனுார் பள்ளத்தில் கலக்கும்.
2021 நவம்பரில் வாலாங்குளம் நிரம்பி, வாய்க்கால் அடைப்பால் உபரி நீர் வெளியேறும் பகுதியில் பொங்கியது. வீடுகளுக்குள் தண்ணீர் செல்வதை தடுக்க, சுங்கம் ரவுண்டானாவிலிருந்து ராமநாதபுரம் வரை அவசரமாக ரோட்டை தோண்டி, வாய்க்கால் ஏற்படுத்தி நீர் செல்ல வழி ஏற்படுத்தினர்.
அதன்பின், திருச்சி ரோட்டுக்கு கீழே கான்கிரீட் பாக்ஸ் பதித்து, உபரி நீர் செல்ல வழி ஏற்படுத்தினர். அத்தகைய சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, வாலாங்குளத்தில் தேக்கியுள்ள நீரின் அளவை கண்காணிப்பது அவசியம்.
