/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டேக் ஆப்' எப்போது! நிலம் வழங்கியும் விமான ஆணையம் ஏற்கவில்லை; சிக்கல் தீர்க்க களமிறங்கும் மாவட்ட நிர்வாகம்
/
'டேக் ஆப்' எப்போது! நிலம் வழங்கியும் விமான ஆணையம் ஏற்கவில்லை; சிக்கல் தீர்க்க களமிறங்கும் மாவட்ட நிர்வாகம்
'டேக் ஆப்' எப்போது! நிலம் வழங்கியும் விமான ஆணையம் ஏற்கவில்லை; சிக்கல் தீர்க்க களமிறங்கும் மாவட்ட நிர்வாகம்
'டேக் ஆப்' எப்போது! நிலம் வழங்கியும் விமான ஆணையம் ஏற்கவில்லை; சிக்கல் தீர்க்க களமிறங்கும் மாவட்ட நிர்வாகம்
ADDED : அக் 04, 2024 12:25 AM

கோவை : கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 99 ஆண்டு குத்தகைக்கு எவ்வித நிபந்தனையுமின்றி, தமிழக அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை, இந்திய விமான நிலைய ஆணையம் இன்னும் ஏற்கவில்லை. இதுதொடர்பான சிக்கல்களை தீர்க்க, ஆணைய அதிகாரிகளுடன் இந்த வாரம் விவாதிக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு, சிங்காநல்லுார், உப்பிலிபாளையம், காளப்பட்டி கிழக்கு, மேற்கு, நீலாம்பூர் மற்றும் இருகூர் கிராமங்களில், 634.82 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும்.
இதில், 468.83 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம்; 134.75 ஏக்கர் பிற துறைகளுக்குச் சொந்தமானவை; 29.37 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம்.
இவற்றில், முதல்கட்டமாக, கையகப்படுத்திய, 451.74 ஏக்கர் நிலம், 20.58 ஏக்கர் புறம்போக்கு நிலம் சேர்த்து, 472.32 ஏக்கர் நிலம், எவ்வித நிபந்தனையுமின்றி, இலவசமாக, 99 ஆண்டு குத்தகைக்கு, கடந்த ஆக., மாதம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கான கடிதம், தமிழக அரசு சார்பில் ஆணைய தலைவருக்கு அனுப்பப்பட்டது.
அதேபோல், மாவட்ட நிர்வாகத்தில் இருந்து விமான நிலைய இயக்குனருக்கு கடிதம் வழங்கப்பட்டது.
இன்னும் மூன்று ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும்; எட்டு ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு, ஐகோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது. ராணுவத்துறையுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, ராணுவத்துக்குச் சொந்தமான, 134.32 ஏக்கர் நிலத்தை பெற்ற பின், நிர்வாக ரீதியாக ஆணையத்துக்கு மாற்றிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்கல் என்ன?
இச்சூழலில், முதல்கட்டமாக நிலம் ஒப்படைக்கப்பட்டு, ஒன்றரை மாதங்களாகியும், இந்திய விமான நிலைய ஆணையம் இன்னும் ஏற்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அலச ஆரம்பித்திருக்கிறது.
இதுதொடர்பாக, கலெக்டர் கிராந்திகுமாரிடம் கேட்டதற்கு, ''தமிழக அரசு வழங்கிய நிலத்தை ஏற்பதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன என்பது தொடர்பாக, ஆணைய அதிகாரிகளை இந்த வாரம் சந்தித்து, விவாதிக்க இருக்கிறோம்,'' என்றார்.