/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றியை பிடிக்க வைக்கும் கூண்டு எங்கே? விவசாயிகள் வேதனை குரல்...
/
காட்டுப்பன்றியை பிடிக்க வைக்கும் கூண்டு எங்கே? விவசாயிகள் வேதனை குரல்...
காட்டுப்பன்றியை பிடிக்க வைக்கும் கூண்டு எங்கே? விவசாயிகள் வேதனை குரல்...
காட்டுப்பன்றியை பிடிக்க வைக்கும் கூண்டு எங்கே? விவசாயிகள் வேதனை குரல்...
ADDED : செப் 08, 2025 10:48 PM

பெ.நா.பாளையம்; கோவை வனச்சரகத்துக்குட்பட்ட தடாகம் வட்டாரத்தில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றை கூண்டு வைத்து பிடிக்கும் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை விவசாயிகளுக்கு காட்டு யானைகள் பெரும் சவாலாக இருந்தது. தற்போது, காட்டு யானைகளை விட, காட்டுப் பன்றிகளினால் பயிர் சேதம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு சட்டம் பிறப்பித்தும், இதுவரை நடைமுறைப்படுத்தப்படாததால், காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதம் தொடர் நிகழ்வாகி வருகிறது.
வன எல்லைப்பகுதியில் இருந்து மூன்று கி.மீ.,க்குள் வரும் காட்டு பன்றிகளை பத்திரமாக பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டும். ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சுட்டு பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட தெற்கு பாளையம் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் இருந்ததால், பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை சார்பில் காட்டு பன்றிகளுக்கான கூண்டுகள் வைக்கப்பட்டு, பத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவிக்கப்பட்டன. அதேபோன்ற ஒரு நிகழ்வை தடாகம் வட்டாரத்தில் வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, கோவை வடக்கு வட்டார விவசாயிகள் கூறுகையில்,' தடாகம் வட்டாரத்தில் ஆனைகட்டி, ஜம்புகண்டி, தூவைப்பதி, பனப்பள்ளி, சின்னதடாகம், பெரிய தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வேளாண் நிலங்களில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இப்பகுதிகளில் காட்டுப் பன்றிகளுக்கான கூண்டுகளை வைக்க வனத்துறையினர் முன் வருவதில்லை. தினசரி ஏராளமான பயிர்கள், காட்டுப் பன்றிகளால் சேதப்படுத்தப்படுகிறது. இது குறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தும், அவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். காட்டு பன்றிகளுக்கான கூண்டுகள் 'ரிமோட் கண்ட்ரோல்' வாயிலாக இயக்கப்படுகின்றன.
காட்டு பன்றிகளை பிடிக்க கூண்டுகளை வைக்கவும், அதை ரிமோட் கண்ட்ரோல் வாயிலாக இயக்க தேவையான டெக்னீசியன்கள் இல்லாததால், பன்றிகளை பிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண, கோவை மாவட்ட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.