/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'துன்பம் இருக்கும் இடத்தில் பகவான் இருப்பார்'
/
'துன்பம் இருக்கும் இடத்தில் பகவான் இருப்பார்'
ADDED : ஜூலை 30, 2025 01:20 AM

கோவை; கோவையில், 'ஆன்மிக அறிவுப் பயணம்' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு, கோத்தாரி லேஅவுட்டில் உள்ள, சாதனாலயாவில் நேற்று மாலை நடந்தது.இதில் பங்கேற்ற, பூஜ்யஸ்ரீ மோக் ஷ வித்யானந்தா பேசியதாவது:
போகம், அபவர்க்கம் இந்த இரண்டும் இணைந்ததுதான் இந்த உலக வாழ்க்கை. இதில் போகம் என்பது இன்பம், துன்பம் இரண்டும் இணைந்தது. இரண்டையும் பிரிக்க முடியாது. சொர்க்க லோகத்தில் இன்பம் மட்டும்தான் இருக்கும். பூலோகத்தில் இவை இரண்டும் இணைந்தே இருக்கும். இன்பம் முன்னே இருக்கும் போது, துன்பம் பின்னே இருக்கும்.
இவை இரண்டும், இந்த உலக வாழ்க்கையில் மாறி, மாறி வந்து கொண்டே இருக்கும்; தவிர்க்க முடியாது. இன்பம் இருக்கும் இடத்தில் பகவான் இருக்க மாட்டார். துன்பம் இருக்கும் இடத்தில் இருப்பார்.ஒரு முறை கிருஷ்ணனிடம் குந்தி, 'எனக்கு துன்பத்தை மட்டுமே கொடு' என்று கேட்டாள். அதற்கு பகவான், 'ஏன் துன்பத்தை கேட்கிறாய், இன்பம் வேண்டாமா?' என்றார்.
அதற்கு குந்தி, 'துன்பம் இருக்கும் இடத்தில்தான் நீ இருப்பாய். அதனால் எனக்கு துன்பத்தை மட்டும் கொடு' என்றாள்.ஜனனம்; மரணம், இன்பம்; துன்பம், ரோகம்; ஆரோக்கியம், மகிழ்ச்சி; துக்கம். இப்படி எல்லாம் இருமைகளால் நிரம்பியதுதான் வாழ்க்கை.இவ்வாறு, பேசினார். சாதனாலயா நிறுவனர் ரங்கநாதன், டாக்டர்கள் அன்னபூரணி, பட்டாபிராமன் ஆகியோர் பங்கேற்றனர்.