/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்
/
தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்
ADDED : மார் 18, 2025 04:39 AM

மேட்டுப்பாளையம், : காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் மற்றும் வாடல் நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் சுமார் 95,000 ஆயிரம் எக்டர் பரப்பில் தென்னை பிரதான பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் வாழைக்கு அடுத்து தென்னை பெருமளவில் பயிரிடப்படுகின்றன. தற்போது காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுருள் வெள்ளை ஈக்கள் மற்றும் வாடல் நோய் தாக்கம் தென்னையில் காணப்படுகிறது. இதனால் மகசூல் குறையும் என விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்
இதுகுறித்து, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், வெள்ளை ஈக்களின் இனப்பெருக்கம் கோடைகாலங்களில் மேலும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
இந்த ஈக்களானது தென்னை மரங்களின் இலையின் அடிப்புறத்தில் இருந்து கொண்டு, சாரை உறிஞ்சி இலைகளின் பச்சையம் முழுமையாக பாதிக்கப்பட்டு, ஒளிசேர்க்கை நடைபெறுவதை தடுப்பதால், காய்களின் மகசூல் குறையும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் இதன் தாக்கத்தை படிப்படியாக கட்டுப்படுத்த முடியும். மேலும் ரசாயன பூச்சிகொல்லி மருந்துகளை உபயோகப்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதாவது, சுருள் வெள்ளை ஈக்களை கட்டுபடுத்த தென்னந்தோப்புகளில் விளக்குப்பொறி, மஞ்சள் ஒட்டுபொறி, விளக்கெண்ணெய் கிரீஸ் தடவப்பட்ட மஞ்சள் நிற பாலீதின் தாள்களை தொங்கவிடுதல் போன்றவற்றை பயன்படுத்தலாம். அதே போல், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை கட்டுபடுத்தும் திறன் கொண்ட, நன்மை செய்யும் ஒட்டுண்ணியான 'என்காரிசியா' என்ற கூட்டுப்புழு உள்ள தென்னை ஓலைத் துண்டுகளை ஏக்கருக்கு 20 வீதம், ஈக்கள் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது 10 மரம் இடைவெளியில் வைத்து ஒட்டுண்ணிகளை விட வேண்டும்.
இந்த ஒட்டுண்ணிகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கீழ் இயங்கி வரும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் பெற்றுகொள்ளலாம். இதுபோன்று பல்வேறு வழிகளில் இதனை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.