/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரிவிதிப்பு குழு உறுப்பினர் பதவிக்கு 25ல் தேர்தல்; காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா
/
வரிவிதிப்பு குழு உறுப்பினர் பதவிக்கு 25ல் தேர்தல்; காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா
வரிவிதிப்பு குழு உறுப்பினர் பதவிக்கு 25ல் தேர்தல்; காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா
வரிவிதிப்பு குழு உறுப்பினர் பதவிக்கு 25ல் தேர்தல்; காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா
ADDED : ஜூலை 20, 2025 01:19 AM
கோவை : கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல், 25ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. இப்பதவி, மீண்டும் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில், தனியார் கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஐந்து மண்டல தலைவர்கள், இரண்டு நிலைக்குழு தலைவர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக, அம்மாநகராட்சியில் நிர்வாகப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
இப்பதவிகளுக்கான காலியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவாதித்த, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தி, நிரப்ப அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கோவை மாநகராட்சியில், 56வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்ததால், அப்பதவி காலியாக உள்ளது. அவர், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினராகவும் இருந்தார். அப்பதவிக்கு புதிதாக ஒருவரை தேர்ந்தெடுக்க, ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல், 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, 10:30 மணிக்கு, கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நடக்கிறது.
தேர்தல் அதிகாரியாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மன்றத்தில் தற்போது எட்டு காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், அழகு ஜெயபாலன், காங்கிரஸ் கட்சி கவுன்சில் குழு தலைவராக இருக்கிறார். மீதமுள்ள ஏழு கவுன்சிலர்களில் ஒருவருக்கு, வரி விதிப்பு குழு உறுப்பினர் பதவி வழங்கப்படுமா அல்லது தி.மு.க.,வே வைத்துக் கொள்ளுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.