/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணினி உதவியாளர்கள்பணி நிரந்தரமாக்கப்படுமா?
/
கணினி உதவியாளர்கள்பணி நிரந்தரமாக்கப்படுமா?
ADDED : ஏப் 27, 2025 09:18 PM
அன்னுார் : நூறு நாள் வேலைத்திட்ட கணினி உதவியாளர்கள், பணி நிரந்தர அறிவிப்பு சட்டசபை கூட்டத் தொடரில் வருமா என கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
அகில இந்திய அளவில், 20 ஆண்டுகளாக, 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சில மாவட்டங்களிலும் அதன் பிறகு பெரும்பாலான மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுகிறது.
குளம், குட்டைகள் தூர் வாருதல், மரக்கன்றுகள் நடுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன. 18 வயதுக்கு மேல் உள்ள, உழைக்கும் திறன் உள்ள கிராம ஊராட்சிகளில் வசிப்போருக்கு, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பணியாற்றுவோருக்கு வேலை அட்டை வழங்குதல், சம்பள விவரங்கள் பதிவு செய்தல் ஆகியவற்றிற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கணினி உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து கணினி உதவியாளர்கள் கூறுகையில், '17 ஆண்டுகளாக பணிபுரிந்தும், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாத சம்பளம் பெற்று வருகிறோம்.
இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். கணினி உதவியாளர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த உறுதி இதுவரை நிறைவேறவில்லை.
சட்டசபை கூட்டத் தொடர் நாளை (29ம் தேதி )முடிவடைய உள்ளது. அதற்குள் பணி நிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா என கண்ணீருடன் காத்திருக்கிறோம்,' என்றனர்.