/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உருவாச்சு தேர்தல் களை உயருதா மோடி அலை!
/
உருவாச்சு தேர்தல் களை உயருதா மோடி அலை!
ADDED : பிப் 25, 2024 12:47 AM
திருப்பூர்;ஒருபுறம் ரோபோ வாயிலாக, மக்களிடம் போய்ச் சேர்கின்றன, அழைப்பிதழ்கள்; மறுபுறம் மாநாட்டுக்கு வருவதற்காக, வித்தியாசமாக மாட்டு வண்டிகளில் வரத் துணிகிறார்கள், கட்சித் தொண்டர்கள்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மாதப்பூரில், வரும் 27ல் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பொதுக்கூட்டம் நடக்கிறது. லோக்சபா தேர்தலுக்கான முதல் கூட்டமாக இது அமைவதாலும், பிரதமர் பங்கேற்பதாலும், தொண்டர்களிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை, தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களை போல் அல்லாமல், இன்று ஒவ்வொரு தெருவுக்கும் 10 - 15 தீவிரத் தொண்டர்கள்; பா.ஜ.,வின் தீவிரப் பரப்புரையாளர்களாக, மத்திய அரசின் தேசாபிமானக் கொள்கைகளையும், பிரதமரின் சிறப்பான திட்டங்களையும் எடுத்துரைப்பதோடு, அத்தெருவுக்குள்ளேயே நிஜப் பயனாளிகளாய்த் திகழ்வோரை வெளிச்சம் பாய்ச்சி மக்களை உணர வைக்கிறார்கள்.
மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவித்து வரும் அண்ணாமலையின் பேச்சு, பொதுமக்கள் மட்டுமல்லாமல், பல கட்சியினரையும் யோசிக்க வைத்துள்ளது.
இவரின் பல கேள்விகளுக்கு எதிர்வினையாற்றுவதற்கு முடியாமல், பல நேரங்களில் மழுப்பலைத்தான் தமிழக ஆளும்கட்சியினர் உள்ளிட்ட எதிராளர்கள் பதிலாகத் தருகின்றனர்.
மோடியின் மனசாட்சியாகத் திகழ்கிறார் அண்ணாமலை என்று, தொண்டர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.
திராவிடக்கட்சிகள் வாக்குகளை அள்ளிய போதெல்லாம், கொங்கு மண்டலத்தில், பா.ஜ.,வுக்கான தனி வாக்குவங்கி, திராவிடக்கட்சியினரை, பல நேரங்களில் மூச்சிரைக்க வைத்திருக்கிறது. உள்ளாட்சித்தேர்தலில் இது நிரூபணமாகியிருக்கிறது.
திருப்பூரில் இரண்டொரு முறை, இந்த யாத்திரை தள்ளிப்போனது. மோடி வருகையின் போது தான் நிறைவு செய்வது இறைசித்தமாய் இருந்திருக்கிறது. அது நிகழப்போகிறது'' என்று பா.ஜ., கட்சியினர் ஆரவாரமோ, ஆர்ப்பரிப்போ இன்றி சொல்கின்றனர்.
''பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரள்வர்; தமிழகத்தின் மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டமாக சரித்திரம் படைக்கப்போகிறது. லோக்சபா தேர்தலுக்கான அச்சாரமாக மட்டுமல்ல; தேசத்தின் மூலை முடுக்கெங்கும் மோடி அலை பரவுகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த அலை பரவாமல் இருக்குமா? அதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்.
ஆம். இங்கும் பரவுகிறது மோடி அலை'' என்று உறுதிபடக் கூறுகிறார்கள் தொண்டர்கள்.----