/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகம் நடக்குமா?.. எதிர்பார்ப்பு
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகம் நடக்குமா?.. எதிர்பார்ப்பு
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகம் நடக்குமா?.. எதிர்பார்ப்பு
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகம் நடக்குமா?.. எதிர்பார்ப்பு
ADDED : செப் 05, 2024 12:05 AM

சூலுார் : எங்களின் வாழ்வாதாரம் மேம்பட, ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்,என,தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், சுமார், 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது.
ஒரு ஏக்கர் நிலத்தில், 75 முதல், 100 தென்னை மரங்கள் நடவு செய்யப்படுகின்றன. நடவுக்குப்பின், ஏழு ஆண்டுகள் கழித்து, மரம் முழுமையாக காய்ப்புக்கு வரும்.
ஒவ்வொரு மரத்தில் இருந்தும், ஆண்டுக்கு, 1000 ரூபாய் மதிப்பிலான தேங்காய்கள் கிடைக்கும். தேங்காய் விற்பனை மூலம், ஆண்டுக்கு, அதிகபட்சமாக, 85 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் நிலை உள்ளது. தேங்காய் விலையில் ஏற்ற, இறக்கங்கள் உள்ளதால், இந்த வருமானம் நிலையாக இருப்பதில்லை. மேலும், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கவும், களை எடுத்தல், ஆட்கள் கூலி உள்ளிட்டவைகளுக்காக, ஆண்டுக்கு, 35 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
இதனால், சில இடங்களில் விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
மதுபானங்கள் விற்கும் போது, ஏன் கள் விற்க கூடாது என்ற கேள்வி எழுந்து பல ஆண்டுகளாகிவிட்டது. அரசு கள் இறக்க அனுமதிக்க வேண்டும். கள் இறக்கினால் தேங்காய் உற்பத்தி குறையும். அப்போது, தேங்காய் விலையும் உயரும். தேங்காய் மூலம் கிடைக்கும் வருவாய், கள் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றால் வருமானம் இரட்டிப்பு ஆகும்.
மேலும், ரேஷன் கடைகளில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலை அரசு விற்பனை செய்கிறது. அதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும், என, நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இதையடுத்து தான் மக்களிடம் தேங்காய் எண்ணெய் வேண்டுமா, பாமாயில் வேண்டுமா என, அரசு கருத்து கேட்டு வருகிறது. இதுவே தவறு என, நினைக்கிறோம். பாமாயில் விற்கும் போது எந்த கருத்தும் கேட்கவில்லை. ஆனால், இப்போது, தேங்காய் எண்ணெய்க்கு மட்டும் கருத்து கேட்பது எதற்கு என்று தெரியவில்லை.
உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் எண்ணத்தில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், தேங்காய்களை ரேஷனில் விற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், ஏராளமானோர் பயன் பெறுவர். இவற்றை செயல்படுத்த அரசு திட்டமிட வேண்டும்.
அதற்கான ஒத்துழைப்பு அனைத்தையும் வழங்க விவசாயிகள் தயாராக உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வருமானம் கிடைக்குமா ?
15 மரங்களில் கள் இறக்கும் போது, ஒரு மரத்துக்கு சராசரியாக, 2 லிட்டர் கள் கிடைக்கும். 1 லி., கள், 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதில், இறக்கு கூலி லிட்டருக்கு, 30 ரூபாய் செலவாகிறது. போலீசுக்கு மாமூல், அவ்வப்போது போடும் வழக்குகளுக்கு, 10 ஆயிரம் செலவு ஆவதாக கூறப்படுகிறது.
குளிர்காலத்தில் கள் விற்பனை குறைவாக இருக்கும், எனக்கூறும் விவசாயிகள், கள் இறக்க அரசு அனுமதி அளித்தால் பலரும் கள் இறக்க துவங்கும் போது, லிட்டருக்கு, 20 ரூபாய்க்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை. என்றும் கூறுகின்றனர்.
இத்தனை பிரச்னைகள் இருப்பதால்தான், பெரும்பாலான விவசாயிகள் தேங்காய் விற்பனை மட்டும் செய்து வருகின்றனர்.