/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி - உடுமலை வழியாக பழநி வரை உதய் எக்ஸ்பிரஸ் வருமா? ரயில் இயக்க தொழில்நுட்பம் குறித்து ஆய்வு
/
பொள்ளாச்சி - உடுமலை வழியாக பழநி வரை உதய் எக்ஸ்பிரஸ் வருமா? ரயில் இயக்க தொழில்நுட்பம் குறித்து ஆய்வு
பொள்ளாச்சி - உடுமலை வழியாக பழநி வரை உதய் எக்ஸ்பிரஸ் வருமா? ரயில் இயக்க தொழில்நுட்பம் குறித்து ஆய்வு
பொள்ளாச்சி - உடுமலை வழியாக பழநி வரை உதய் எக்ஸ்பிரஸ் வருமா? ரயில் இயக்க தொழில்நுட்பம் குறித்து ஆய்வு
ADDED : மார் 09, 2024 07:33 AM

பொள்ளாச்சி : பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சி வழியாக விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், ரயில் பயணியர் காத்திருக்கின்றனர்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை மற்றும் பழநி பகுதிகளைச் சேர்ந்த தனியார் துறை வல்லுநர்கள், குறிப்பாக, பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் பணியாற்றுகின்றனர்.
இவர்கள், பொள்ளாச்சி, உடுமலை, பழநியில் இருந்து பெங்களூருக்கு, குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு முறையாவது பயணம் செய்கின்றனர்.
ஏராளமான வர்த்தகர்கள், வணிகர்களும் வணிக காரணங்களுக்காக பெங்களூருக்கு செல்கின்றனர். எனவே, பொள்ளாச்சி வழியாக பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் பழநியை சேர்ந்த, ஐ.டி., நிறுவன ஊழியர்கள் நிறுவனங்களுக்கும், நோயாளிகளும், சிறந்த மற்றும் மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகளுக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளுக்கும் செல்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள கல்லுாரி மாணவர்கள், பெங்களூரு, கர்நாடகாவின் பிற இடங்களிலும் உள்ள கல்லுாரிகளில் படிக்கின்றனர்.
தற்போது, பொள்ளாச்சி, உடுமலை, பழநி மற்றும் பெங்களூரு இடையே தினசரி ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை நான்கு தாலுகா மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இப்பகுதியில், ஆன்மிக மற்றும் சுற்றுலா இடங்கள் நிறைந்துள்ளன. பெங்களூருவில் இருந்து இங்கு வருவோரும், இங்கிருந்து பெங்களூரு செல்வோரும், கோவை, திருப்பூர், திண்டுக்கல் போன்ற இடங்களுக்கு சென்று, அங்கு இருந்து பெங்களூருக்கு செல்கின்றனர்.
இதுவரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி பகுதிகளிலிருந்து பெங்களூருக்கு நேரடி ரயில் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, கோவை - உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை, பொள்ளாச்சி, பழநி வரை (கிணத்துக்கடவு வழியாக) நீட்டிக்க வேண்டும் என, மக்கள் பிரதிநிதிகள், ரயில் பயணியர் சங்கம் சார்பில், ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், இங்கிருந்து, ஐ.டி., நிறுவனம் செல்லும் ஊழியர்கள், மக்கள், சுற்றுலா வருவோர் பயனடைவர்.
பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள், உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க தொழில்நுட்பம் குறித்து ஆராய்ந்து சென்றதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் இருந்து, பெங்களூருக்கு மொத்தம், 11 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக இயக்கினால், இப்பகுதி மக்களுக்கு பயனாக இருக்கும்.
எனவே, விரைவில் இவ்வழியாக அந்த ரயில் இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.