தக்க நேர பரிசோதனையால் சர்க்கரை பாதிப்பை கட்டுக்குள் வைப்பது சுலபமே!
தக்க நேர பரிசோதனையால் சர்க்கரை பாதிப்பை கட்டுக்குள் வைப்பது சுலபமே!
UPDATED : நவ 21, 2026 03:36 PM
ADDED : நவ 21, 2026 03:34 PM

கோவை: ‘‘இந்தியாவில் 8.98 கோடி பேருக்கு சர்க்கரை பாதிப்பு உள்ளது. இதில், 43 சதவீதம் பேர், சர்க்கரை பாதிப்பு இருப்பது தெரியாமலே உள்ளனர்’’ என்கின்றனர் கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி மற்றும் நீரிழிவு நோய் மருத்துவர்கள் சிவஞானம் மற்றும் சங்கர் ஆகியோர்.
சர்க்கரை குறைபாடு பிரச்னை பற்றி இவர்களிடம் விலாவாரியாக பேசினோம்.
சர்க்கரை பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும் குளூக்கோஸ் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இந்த குளூக்கோஸை உடல் செல்கள் பயன்படுத்துவதற்கு, கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் உதவுகிறது. இன்சுலின் போதுமான அளவு சுரக்காத போதோ அல்லது சுரக்கும் இன்சுலினை உடல் சரியாகப் பயன்படுத்த முடியாத போதோ, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதைத்தான் சர்க்கரை பாதிப்பு என்கிறோம்.
சர்க்கரை பாதிப்புக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பரம்பரை காரணிகள், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, அதிக கலோரி கொண்ட உணவு உட்கொள்வது, சர்க்கரை கலந்த பானங்களை அதிகம் குடிப்பது, மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவை முக்கிய காரணிகள். குடும்பத்தில் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களுக்கு சர்க்கரை பாதிப்பு இருந்தால் பிறருக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* சர்க்கரையை கட்டுப்படுத்தாவிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
நீண்டகாலமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் உறுப்புகள் பாதிக்கப்படலாம். இதய ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படலாம். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படலாம். சிறுநீரகச் செயலிழப்பு, பார்வைக் குறைபாடு, கை, கால்களில் உணர்வு குறைபாடு ஏற்படலாம். கால்களில் காயங்கள் ஏற்பட்டு ஆறாமல் போகலாம்.
* டைப் 2 சர்க்கரையை வராமல் தடுக்க முடியுமா?
டைப் 2 சர்க்கரை நோயை தடுக்க வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவும். உடல் எடையை சரியான அளவில் பராமரித்தல், காய்கறி, கீரைகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுதல், புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது அவசியம்.
தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும். குறிப்பாக உணவுக்குப் பிறகு 10 நிமிடங்கள் மெதுவாக நடப்பது உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்த உதவும்.
உடல்நிலைக்கு ஏற்ப உடற்பயிற்சியைத் தேர்வு செய்வது அவசியம். மருந்து, வாழ்வியல் முறை, நல்ல துாக்கம், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது ஆகியவையே சர்க்கரை பாதிப்பை இயல்பு நிலைக்கு திருப்பும் மந்திரங்கள்.
